மதுரை: மதுரையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தைக் குறைக்க மரக்கன்றுகளை நட்டு வளர்க்கப் பொதுமக்களுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
205 நகரங்களை உள் ளடக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, உலகளவில் தீவிர வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தப் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் 2-வது இடத்திலும், தமிழகத்தின் மதுரை 7-வது இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
நகர்மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக மதுரையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. மதுரையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக உள் ளது. சுமார் 100 முதல் 106 பாரன்ஹீட் வரை பதிவாகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், கடற்கரைக்கும் நடுவில் சுமார் 100 கி.மீ. தூரத்தில் இந்நிலப்பரப்பு அமைந்துள் ளதால் இங்கு குளிர்ந்த காற்று வீசுவது குறைந்து வருகிறது.
மேலும், கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரிப்பு, மரங்கள் மற்றும் காடுகள் வேகமாக அழிக்கப்படும் காரணங்களால் வெப்பம் அதிகரிக்கிறது. உலக அளவில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்கள் மற்றும் கார்பன் உமிழ்வு அதிகரிப்பு காரணமாக மதுரை போன்ற நகரங்களின் வெப்பநிலை உயர்ந்துள்ளது.
நீண்ட வறண்ட வானிலை, மழைப்பொழிவு குறைவு, வடக்கில் இருந்து வீசும் வெப்பக் காற்று ஆகியவை மதுரைக்கு வெப்பத்தை அதிகரிக்கிறது என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலக அளவில் ஏற்படும் மாற்றங்களைத் தடுப்பது நமது கையில் இல்லை. ஆனால், உள்ளூர் அளவில் நம்மால் இயன்ற மாற்றங்களைச் செய்யலாம்.
காடுகள் அழிப்பைத் தடுக்க வேண்டும். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன் மூலம் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க முடியும். இதற்கு பொதுமக்களுடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசி ரியர் ராஜேஷ் கூறியதாவது: மரக்கன்றுகளை நடுவதில் காட்டும் ஆர்வத்தை, அவற்றை வளர்ப்பதில் காட்டுவது இல்லை. 100 மரக்கன்றுகள் வைக்கப்பட்டால் அவற்றில் 10 மரங்கள் மட்டுமே வளரும் நிலை உள்ளது.
மாநகர் பகுதிகளில் இடம் இல்லாவிட்டால், மாநகரின் வெளியே பயன்படுத்தப்படாத இடங்களில் வனத்துறை யினர் அதிக அளவில் மரக் கன்றுகளை வைத்து குறுங்காடுகளை உருவாக்கலாம்.
பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். சுவர்களில் படரும் கொடிகள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும். வீட்டின் மொட்டை மாடியில் வெப்பத்தை உள்ளிழுக்காத வெள்ளை நிற பெயின்ட் அடிக்கலாம்.
சாலைகளில் உள்ள ரவுண்டானாக்களில் பெரிய இலைகள் மற்றும் அகன்ற கிளைகள் கொண்ட மரங்களை வளர்க்கலாம். மரங்கள் நிழல் தருவதுடன், வெப்பத்தை உறிஞ்சி காற்றின் வெப்பநிலையை 1 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க உதவும்.
வேகமாக வளரக்கூடிய பூவரசு, புங்க மரம், கடம்ப மரம், வாகை மரம், மூங்கில், பாதாம், மந்தாரை, தூங்குமூஞ்சி மரம் உள்ளிட்ட மரங்களை வளர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.