பெரம்பூர் கிராமத்தில் மரத்தில் வசிக்கும் வவ்வால்கள்.

 
சுற்றுச்சூழல்

கொள்ளிடம் அருகே பெரம்பூரில் வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத மக்கள்

என்.செல்வக்குமார்

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராம மக்கள் மரங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்காமல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரம்பூர் கிராமம் வயல்வெளிகளும், மரங்களும் நிறைந்த இயற்கை சூழலை கொண்டது.

இங்குள்ள சாலையோர மரங்களில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் தாயகம் திரும்புவது காலங்காலமாக நடைபெற்று வந்தது. இதனால், கிராம மக்கள் தீபாவளியன்று பட்டாசு வெடிக்காமல் பறவைகளை பாதுகாத்தனர்.

இதேபோல, வயல்வெளியில் உள்ள ஆலமரத்தில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்களையும் கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்தப் பகுதியை ‘வவ்வாலடி' எனப் பெயரிட்டு, வவ்வால்களுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

இதுகுறித்து பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராஜா ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: எங்கள் கிராமத்தில் உள்ள ஓர் ஆலமரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசிக்கின்றன. அவை ‘வவ்வாலடி’யைத் தவிர வேறு இடங்களில் தங்குவதில்லை.

வெளிநபர்கள் யாரும் வவ்வால்களை வேட்டையாடாமல் இருக்க கிராம இளைஞர்கள் கண்காணிக்கிறோம். தீபாவளியன்று வவ்வால்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக கிராமத்தில் பட்டாசு வெடிப்பதில்லை. குறிப்பாக, வவ்வாலடி பகுதியில் யாரும் பட்டாசு வெடிக்க மாட்டார்கள்.

வவ்வால்களின் எச்சம் நிலத்துக்கு இயற்கை உரமாகவும், மரங்கள் செழித்து வளரவும் உதவுகிறது. ஆனால், முன்பு வந்து தங்கிய வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து தற்போது குறைந்துவிட்டது. மரங்களின் எண்ணிக்கை குறைந்ததே இதற்கு காரணம் என பெரியவர்கள் கூறுகின்றனர்.

எங்களால் முடிந்தவரை பறவைகளையும், வவ்வால்களையும் பாதுகாத்து வருகிறோம். மரங்களை பாதுகாக்கவும், அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் அரசு, வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT