ஊட்டி அருகே சோலூர் பகுதியில் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைகால வறட்சி காரணமாக தேயிலைப் பயிர்களில் சிவப்பு சிலந்தியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 56 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டு வருகிறது. தேயிலையில் பருவநிலை மாறுபாடுகளுக்கு ஏற்றவாறு சில பூச்சிகளும், நோய்களும் அவ்வப்போது தாக்கி, மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன.
பனி மற்றும் குளிர் காலங்களில் கொப்புள நோய் தாக்குதலும், வெப்பம் அதிகரிக்கும் போது சிவப்பு சிலந்தி தாக்குதலும் அதிகமாக காணப்படும். தற்போது, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் தேயிலைப் பயிர்களில் சிவப்பு சிலந்தியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெப்பம் மேலும் அதிகரித்தால் இச்சிலந்திகளின் தாக்குதலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது குறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சிவப்பு சிலந்தியின் தாக்குதலை கட்டுப்படுத்த நிழல் தரும் மரங்களை 40 அடிக்கு 1 மரம் வீதம் தேயிலை தோட்டங்களில் நட வேண்டும்.
நிழல் தரும் மரங்கள் இருக்கும் இடங்களில் சிவப்புசிலந்தியின் தாக்குதல் மிகக் குறைவாகவே இருக்கும். சிலந்திகளின் தாக்குதலை கட்டுப்படுத்த தெளிப்புநீர் பாசனம் உதவுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறும்போது, “ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் ‘வெர்டிசிலியம் லெகானி’ என்ற பூஞ்சாணத்தை கலந்து தெளித்தால் சிலந்திகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.
‘அசாடிராக்டின் 1000 பிபிஎம்’ தாவர பூச்சிகொல்லியை லிட்டருக்கு 2.மி.லி என்ற விகிதத்தில் கலந்து தெளித்தும் சிவப்பு சிலந்தியை கட்டுப்படுத்தலாம்.
சிலந்திகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும் சமயத்திலும், கோடைகாலத்திலும் பென்பைராக்சிமேட் 5 ஈசி 1 மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு, புரோப்பார்கைட் 57 ஈசி 2மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு, ஸ்பைரோமெசிஃபென் 22.9 எஸ்சி 0.75மி.லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு என ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை, பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் தெளித்து கட்டுப்படுத்தலாம்” என்றனர்.