பெரிய தோல் குருவி

 
சுற்றுச்சூழல்

மேட்டூர் அருகே பண்ணவாடிக்கு அரிய வகை பெரிய தோல் குருவி வலசை

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அருகே பண்ணவாடிக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த அரியவகை பெரிய தோல் குருவி பறவை தென்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் முகாமிடுகின்றன.

அந்த வகையில், வலசையாக ஐரோப்பாவிலிருந்து இந்தியா வுக்கு கருமுதுகு பெரிய தோல் குருவி வலசை வந்துள்ளதை சேலம் பறவையியல் கழகம் மற்றும் மேட்டூர் பறவை ஆர்வலர்கள் ஷாஷன் மற்றும் செந்தில் குமார் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பறவை ஆர்வலர்கள் கூறியதாவது: இந்தியாவில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வலசை வந்த பறவைகள் நாடு திரும்பத் தொடங்கியுள்ளன. தற்போது, பெரும்பாலான பறவைகள் இடம் பெயர்ந்து விட்ட நிலையில், ஒரு சில பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

அந்த வகையில், பட்டைத்தலை வாத்து, கடற்காகம் ஆகியவை முக்கியமானவை. கடலோர வலசைப்பறவைகள் திரும்பும் நிலையில் ஐரோப்பாவைச் சேர்ந்த அரிய வகை பறவையான சாம்பல் தலை ஆள்காட்டி, பெரிய தோல் குருவி உள்ளிட்ட பறவைகள் இரண்டு நாட்கள் பண்ணவாடியில் தங்கியுள்ளன.

இதில் பெரிய தோல் குருவி பறவை கடந்த 10 ஆண்டுகளில் 2-வது முறையாக பண்ணவாடிக்கு வந்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் உள்ளுர் பறவைகளின் இனப்பெருக்ககாலம் தொடங் கியுள்ளது.

பண்ணவாடிக்கு பல பறவை இனங்கள் உள்ளூர் வலசையாக வரத் தொடங்கியுள்ளன. மேலும், வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்தல் காரணமாக பண்ணவாடிக்கு வருவதால் ஒரு பல்லுயிர் பன்மையம் கொண்ட இடமாக மாறியுள்ளது, என்றனர்.

SCROLL FOR NEXT