சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் விதிமீறலில் ஈடுபட்டதாக 5 மாதங்களில் 467 ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

ச.கார்த்திகேயன்

சென்னை: சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக கடந்த 5 மாதங்களில் 467 தொழிற்சாலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அவ்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வே.க.ராஜீவ் மேற்கொண்ட ஆய்வு மற்றும் அறிவுறுத்தலின்படி விதிமீறல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 5 மாதங்களில், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதற்காக, நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 ஆகியவற்றின் கீழ் 467 தொழிற்சாலைகளுக்கு, மூடுதல் மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தல் உத்தரவுகளை மாசுக்கட்டுப்பாடு வாரியம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றுதல், இசைவாணை பெறாமல் தொழிற்சாலைகளை இயக்குதல், நிர்ணயிக்கப்பட்ட புகை வெளியேற்றம் மற்றும் கழிவுநீர் வெளியேற்றத் தரநிலைகளைப் பின்பற்றத் தவறுதல் மற்றும் நடைமுறையிலுள்ள சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் சட்டப்பூர்வ நிபந்தனைகளை மீறுதல் ஆகியவை இத்தகைய விதிமீறல்களில் அடங்கும்.

சுற்றுச்சூழல் சட்டங்களைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்தல், மாசுபாட்டைத் தடுத்துக் கட்டுப்படுத்துதல், காற்று, நீர் மற்றும் நிலத்தின் தரத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மாநிலம் முழுவதும் நிலையான தொழில் வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில், மாசு கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து ஆய்வுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுச்சூழல் சட்டங்களின்படி விதிமுறைகளைப் பின்பற்றாத மற்றும் இசைவாணையின்றி செயல்படும் தொழிற்சாலைகள் மீது எந்த ஒரு பாரபட்சமுமின்றி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT