ஊட்டி லவ்டேல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புத்துறை ஆராய்ச்சியாளர் குணால் மற்றும் குழுவினர்.
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள 125 இடங்களை கண்டறிந்து, அங்கு நிலச்சரிவை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடுக்கும் நவீன சென்சார் கருவிகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கனமழையின்போது, சுமார் 65 இடங்களில் பெரிய அளவிலான மண்சரிவு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்தன.
இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் ஏற்கெனவே 6 முக்கிய இடங்களில் சோதனை அடிப்படையில் நவீன சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்த முயற்சியின் பலன்களைத் தொடர்ந்து, திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள மேலும் 125 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் சென்சார் கருவிகளைப் பொருத்துவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழக பேரிடர் மீட்புத் துறை ஆராய்ச்சியாளர் குணால் தலைமையிலான குழுவினர் குன்னூர், பர்லியாறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து,
நேற்று ஊட்டி லவ்டேல், தலையாட்டுமந்து, கோடப்பமந்து, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர் குணால் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள 125 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்த பிறகு, கனமழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பே எச்சரிக்கைத் தகவல்களை அளிக்கும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்படும்” என்றார்.
எவ்வாறு செயல்படும்?
இந்த நவீன சென்சார் கருவிகள் மண்ணின் ஈரப்பதம், நிலத்தின் அசைவுகள், பாறைகளின் நகர்வு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கும். நிலச்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும்போது, கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கைத் தகவல்களை அனுப்பும் வகையில் இக்கருவிகள் செயல்படும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் நிலச்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியும்.
இதன் மூலம் உயிரிழப்புகளையும் பொருள் சேதங்களையும் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.