சுற்றுச்சூழல்

தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு நீர்நிலைகளை தூர்வார அனுமதி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பெரு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மூலம் நீர்நிலைகளை புனரமைப்புப் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் 22,051 சிறுபாசன ஏரிகள் மற்றும் 69,777 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. இந்த நீர்நிலைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மாநில நிதியில் செயல்படுத்தப்படும் சிறுபாசன ஏரிகள் புனரமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

எனினும், கணிசமான நீர்நிலைகளின் இயல்பான நீர்தேக்கத் திறன் இன்னும் முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து அவற்றை பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆர்), தன்னார்வ அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்களிப்பைப் பயன்படுத்தி புனரமைத்து பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் நீர்நிலைகளை இயல்பான கொள்ளளவுக்கு மீட்டெடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் உதவும். அதேபோல் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கான தண்ணீர் சேமிப்பை ஒழுங்குபடுத்தவும், வெள்ளப் பாதிப்பைத் தடுக்கவும் இப்பணிகள் அவசியமாகின்றன.

அதன்படி, நீர்நிலையைப் புனரமைக்க விரும்பும் பெருநிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதை, களஆய்வு செய்து 15 நாட்களுக்குள் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் ஆட்சியருக்கு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் பணிகளைச் செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சித் துறை வழங்கும்.

3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்

அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கும், சார்ந்த அமைப்புகள், நிறுவனத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதிலிருந்து 3 மாதங்களுக்குள் பணியை நிறைவு செய்வது அவசியம். இதற்கான டெண்டர் கோரும் நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் வேறு அரசுத் திட்டத்தில் புனரமைக்கப்பட்ட நீர்நிலைகளை மீண்டும் தூர்வார தேர்வு செய்யக்கூடாது.

தனியார் நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் தங்களது சொந்த நிதியில் நேரடியாக பணிகளை மேற்கொள்ளலாம். இல்லையெனில் மாவட்ட நிர்வாகத்திடம் நிதி வழங்கி அரசை பணிசெய்யக் கோரலாம். மேலும், இயந்திரங்களை மட்டும் இலவசமாக வழங்கியும் பணிகளுக்கு உதவலாம். தேவையெனில் ‘வி பி கிராம் ஜி’ எனும் வளர்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்துடன் ஒருங்கிணைத்து கரையோர மரக்கன்றுகள் நடுதல் பணிகளை மேற்கொள்ளலாம்.

நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் உபரி களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் ஜல்லி போன்றவை விவசாயிகளுக்கு வேளாண் பயன்பாட்டுக்கும், பொதுமக்களுக்கு வீட்டு பயன்பாட்டுக்கும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

நீர்நிலைகள் தூர்வாருதல், வண்டல் மண் அகற்றுதல் என அப்பணிகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆணையர், ஊரக வளர்ச்சி அலுவலர்களுடன் கலந்தாலோசித்து இந்த வழிகாட்டுதல்களில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரம் ஊரக வளர்ச்சித் துறை செயலருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT