குன்னூர்: குன்னூர் ரேலியா அணை முற்றிலும் வறண்டு சேறும், சகதியுமாக காணப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் முக்கிய நீராதாரங்கள் அனைத்தும் வறண்டு வருகின்றன. நகரின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும், 46.7 அடி உயரம் கொண்ட ரேலியா அணை வறண்டு சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக, நகராட்சியின் 30 வார்டுகளில் வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
தொடரும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக வியாபாரிகள் மற்றும் மக்கள் அன்றாட தேவைகளுக்காக லாரிகளில் கொண்டுவரும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி பயன் படுத்துகின்றனர். எமரால்டு அணையும் வறண்டு வருவதால் அங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்வதிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், பல கோடி ரூபாய் செலவு செய்த கரன்சி குடிநீர் திட்டம் முழு பயனில்லாமல் உள்ளது. பந்துமை அணை தூர்வாரப்படாமல் பயனற்று கிடக்கிறது. நீராதாரங்களை தூர்வாரி குடிநீர் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து குன்னூர் நகராட்சி ஆணையர் கிருஷ்ணராம் கூறும்போது, ‘‘தற்போது எமரால்டு கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்கப்படு கிறது. நீராதாரங்களை தூர் வாரி குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வீணாவதை தடுக்கவும், மேம்படுத்தவும் ரேலியா அணை உள்ளிட்ட நீராதாரங்களில் குடிநீர் விநியோகத்துக்கான புதிய குழாய்கள் அமைக்க, ரூ.56 கோடி மதிப்பீட்டில் திட்டம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.நீர்வரத்தின்றி வறண்டு காணப்படும் குன்னூர் ரேலியா அணை.
வற்றாத கிணற்றில் நீர் எடுத்து விநாயகருக்கு அபிஷேகம்
நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியை போக்கவும், விவசாயம் செழிக்கவும் மற்றும் குடிநீர் தேவைக்காக மழை பொழிய வேண்டியும், குன்னூர் இளித்தொரை கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் கிராம மக்கள் சார்பில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட படுகர் இன பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து வற்றாத கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து விநாயகருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஆண்டு தீவிர வறட்சி நிலவுவதால், கடந்த 50 ஆண்டு களுக்கு முன்பு செய்தது போல, வீட்டிற்கு ஒருவர் என ஊர் மக்கள் அனைவரும் எந்த வேலைக்கும் செல்லாமல், முழு விரதமிருந்து, வீடுகளில் விளக்கேற்றி வைத்துவிட்டு ஊர் தலைவர் சேகரன் தலைமையில் கோயிலில் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தினர்.