சுற்றுச்சூழல்

சென்னையில் பறவை ஓவியக் கண்காட்சி!

உள்நாட்டுப் பறவைகளை கவனப்படுத்தும் படைப்புகள்

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலியின் பிறந்த நாள் நவம்பர் 12. இதையொட்டி நாடு முழுவதும் பறவை மாதமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை கல்ப த்ருமா ஆர்ட் ஸ்பேஸ் ஓவியக் காட்சிக்கூடத்தில் ‘WINGED NON-SAPIENS’ என்கிற குழு ஓவியக் காட்சி டிசம்பர் 5-ம் தேதி தொடங்கியது.

சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட ஓவியர்கள் புவனேஸ்வரி.இ.எம்., பூபதி.எஸ், கேத்தரின் அலெக்சாண்டர், தியானேஸ்வரன்.ஆர், டயானா, எஸ்.ஜெயராஜ், நந்தினி வெங்கேடசன், வி.ரவீந்திரன், ஆர்.சௌந்தர்ராஜன் ஆகிய ஒன்பது ஓவியர்களின் ஓவியங்கள், சிற்பங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சென்னை ஆர்.ஏ.புரம் செட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயம், டயானா ஆர்ட் ரூம் ஆகியவற்றின் மாணவர்களின் ஓவியங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை காட்டுயிர் பாதுகாவலரும் பறவையியலாளருமான தாரா காந்தி தொடங்கி வைத்தார். தாரா காந்தி சலீம் அலியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் கிராஃபிக் ஓவியரும் கல்வியாளருமான முக்தா சேதி, காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன் உள்ளிட்டோர் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

பொதுவாக மனிதர்களே எல்லா இடங்களிலும் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். மாறாக, இயற்கையின் முக்கிய அங்கமாகக் காட்டுயிர்கள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள், கடல் உயிரினங்கள் உள்ளிட்டவை உள்ளன. அந்த வகையில் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களான பறவைகளைக் கொண்டாடும் வகையில் ‘விங்க்டு நான் சேப்பியன்ஸ்’ கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியில் பல்வேறு பாணிகளில் வரையப்பட்டுள்ள இந்தியப் பறவைகளின் ஓவியங்கள், சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அழகுக்காக அல்லாமல், உள்நாட்டுப் பறவைகளை கவனப்படுத்தும் வகையில் இந்தப் படைப்புகள் இருப்பது தனிச்சிறப்பு.

  • இந்தக் கண்காட்சி நிகழும் இடம்: கல்ப த்ருமா ஆர்ட் ஸ்பேஸ், 72/61, கதீட்ரல் சாலை, கோபாலபுரம், சென்னை.

  • தொடர்புக்கு: 9962293401

  • நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7.30 வரை.

  • (கண்காட்சி இன்று (டிச. 7) நிறைவடைகிறது.)

SCROLL FOR NEXT