கோப்புப்படம்
புதுடெல்லி: உலக கழிப்பறை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள 5.67 லட்சம் கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காதவை (ஓடிஎப்) என அறிவிக்கப்பட்டுள்ளன. இது கடந்த 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 467% உயர்வு ஆகும். இவற்றில் 4.86 லட்சம் கிராமங்கள் ஓடிஎப் பிளஸ் மாடல் நிலையை அடைந்துள்ளன. அதாவது அவை திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளன. அதேநேரம், இந்த கிராமங்கள் திட, திரவக் கழிவுகளை நிர்வகிப்ப துடன் தூய்மையை பராமரிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறும்போது, “மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் 95 சதவீத கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது” என்றார்.