சுற்றுச்சூழல்

திருப்போரூரில் ரூ.471 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: 1.65 டிஎம்சி நீரை தேக்க முடியும்

செய்திப்பிரிவு

தமிழகத்தில், மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு, குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. அதற்காக, அரசு சார்பில், புதிய நீர்த்தேக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நீர்வள ஆதாரத்துறை சார்பில், கோவளம் துணை வடிநில பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுக்காக்களுக்கு உட்பட்ட பகுதியில் 4,375 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.

இதில் 1.65 டிஎம்சி நீரை தேக்கி வைக்க முடியும். இதில் அதிகபட்சமாக 12 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்ற முடியும். ஆண்டுக்கு அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளின் 2.25 டிஎம்சி நீர் தேவையை இந்த நீர்த்தேக்கம் பூர்த்தி செய்யும். தினமும் 170 மில்லியன் லிட்டர் குடிநீரை விநியோகிக்க முடியும்.

இத்திட்டத்துக்கு, தமிழக கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இப்பகுதி கடலோடு இணையும் பகுதி என்பதால், பல்லுயிர் பெருக்கம் அதிகமாக நிகழுமிடமாக இருப்பதாலும், இந்த நீர்த்தேக்கம் ஏற்படுத்தப்பட்டால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இத்திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை, பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் வழங்கி இருப்பதாகவும் புகார் தெரித்து வருகின்றனர். அதனால், இந்த நீர்தேக்கத்தால் பாதிக்கப்படும், கோவளம் பகுதி மக்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநரை சந்தித்து, இத்திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT