தூத்துக்குடி: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பேரிடர் தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த புவியியல் ஆய்வாளரான தூத்துக்குடி வஉசி கல்லூரி புவியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சே.செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியது: “நேபாளம் - சீனா (திபெத்) எல்லைப் பகுதியில் 26.08.2026 அன்று ஏற்பட்ட திடீர் 'பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம்' (Glacial Lake Outburst Flood,GLOF) உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. செயற்கைக்கோள் படங்கள் ஆய்வுகள் அடிப்படையில், இந்த பேரழிவு ஒரு பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயரமான இமயமலைப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், குறிப்பாக சூப்பர் எல் நினோ போன்ற கடுமையான காலநிலை மாற்ற நிகழ்வுகளின் காரணமாக வெப்பநிலை அதிகரித்தது. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகி, பனிக்கட்டிகளுக்கு இடையில் நீர் தேக்கம் அதிகரித்தது. இந்த நீர், மிகுந்த அழுத்தத்தை உருவாக்கி, பனிப்பாறைகளின் உள்ளக நிலைத்தன்மையை குறைத்தது.
இந்த அதிக அழுத்தத்தின் விளைவாக, பெரிய கொள்ளளவு கொண்ட பனிப்பாறைகள் திடீரென உடைந்து கீழ்நோக்கி சரிந்து விழுந்தன. இந்த சரிவுடன் சேர்ந்து, பெருமளவில் நீர், மண் மற்றும் பாறைகள் கலந்த வெள்ளப்பெருக்கு உருவாகி, மிகுந்த சக்தியுடன் பள்ளத்தாக்குகளுக்குள் பாய்ந்தது.
இந்த வெள்ளப்பெருக்கு மிக வேகமாக நகர்ந்து, ஆறுகளில் திடீர் நீர்மட்ட உயர்வை ஏற்படுத்தியது. சில இடங்களில், வெறும் 30 நிமிடங்களில் சுமார் 9 மீட்டர் வரை நீர்மட்டம் உயர்ந்தது என்பது இந்த பேரழிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த நிகழ்வு ஆரம்பத்தில் நிலநடுக்கமாக தவறாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், இது உண்மையான நிலநடுக்கமல்ல. மாறாக, பனிப்பாறை உடைப்பு மற்றும் பாறை சரிவு காரணமாக உருவான அதிர்வு என்பதை உறுதிப்படுத்தின.
ஆற்றின் இயல்பு பாதை மாற்றம் செயற்கைக்கோள் ஆதாரங்கள் அடிப்படையில் பனிப்பாறையின் கீழ்ப்பகுதி திடீரென உடைந்து சரிந்துள்ளது தெளிவாக பதிவாகியுள்ளது. இது பனிப்பாறையின் நிலைத்தன்மை குறைபாடு மற்றும் உள்ளக நீரழுத்தத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. அதோடு, வெள்ளப்பெருக்கு மிகுந்த வேகத்துடன் கீழ்நோக்கி பாய்ந்ததால், ஆற்றின் இயல்பான பாதை பல இடங்களில் மாற்றமடைந்துள்ளது. இதன் விளைவாக புதிய சேற்றுப் பாதைகள் உருவாகி, ஆற்றுப்பாதையின் இயற்கை வடிவமைப்பு மாற்றமடைந்துள்ளது.
'பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம்' (GLOF) அபாயத்தை குறைப்பதற்காக பல நிலைகளில் ஒருங்கிணைந்த முன் எச்சரிக்கை அமைப்புகள் உருவாக்கப்படுவது அவசியமாகிறது. இதற்காக, பனிக்குளங்களில் நீர்மட்ட மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க சென்ஸார்கள் பொருத்தப்பட வேண்டும். அதேபோல், ஆற்றுப்பாதைகளில் திடீர் நீர்மட்ட உயர்வுகளை உடனுக்குடன் கண்டறிய உண்மை நேர கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுவது முக்கியம்.
புவியியல் ஆய்வாளர் முனைவர் சே.செல்வம்
மேலும், சமூக விழிப்புணர்வை மேம்படுத்தி, அவசர கால வெளியேற்ற திட்டங்களை முறையாக செயல்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும். நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ‘பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம்' அபாயத்தை முன்கூட்டியே கணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மொத்தத்தில், ‘பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம்' போன்ற பேரழிவுகள் காலநிலை மாற்றத்துடன் நேரடியாக தொடர்புடையவை என்பதும், எதிர்காலத்தில் இதன் நிகழ்தகவு மேலும் அதிகரிக்கும் என்பதும் தெளிவாகிறது. எனவே, செயற்கைக்கோள் கண்காணிப்பு, நிலையான முன் எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் ஏஐ அடிப்படையிலான முன்னறிவிப்பு மாதிரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இத்தகைய பேரழிவுகளின் தாக்கத்தை குறைக்க முடியும் என தெரிவித்தார்.