சுற்றுச்சூழல்

கோடியக்கரையில் ஆயிரக்கணக்கில் குவிந்த வெளிநாட்டுப் பறவைகள் - தொடங்கியது வலசைக் காலம்

செய்திப்பிரிவு

கோடியக்கரை: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் வரும் வெளிநாட்டு பறவைகள் தற்போது வலசை வந்து குவிந்துள்ளன.

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை காலத்தில், வட துருவப் பகுதிகளில் இருந்து ஏராளமான பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வருகின்றன. அதேபோல அண்டை நாடுகளான ஈரான், இலங்கை, சைபீரியா, மங்கோலியா உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து 15 வகையான நிலப் பறவைகளும், 65 வகையான நீர்ப்பறவைகளும் இச் சரணாலயத்துக்கு வருவது வழக்கம். ஆர்டிக் பிரதேசங்களில் காணப்படும் கொசு உள்ளான், மூக்குஉள்ளான், மத்திய ஆசியாவில் இருந்து வரும் கோட்டான், ஈரான் நாட்டிலிருந்து வரும் 3 கிலோ எடை கொண்ட பூநாரை, மத்திய கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கடல் ஆலா உள்ளிட்ட பறவைகள் அதிகம் வருகின்றன.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் வரை ஒவ்வொரு ஆண்டும் 294-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு வந்து செல்வதாக கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இம்மாதம் 3-வது வாரத்தில் பறவைகள் வரத்து தொடங்கியது. எப்போதும் சீசனுக்கு முதலில் வரும் கூழைக்கடா, பூநாரை, வர்ண நாரை ஆகியவை முதலில் வரத் தொடங்கின.

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து செங்கால்நாரை, கடல்காகம், கடல்ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரிதலை வாத்து, கூனி அரிச்சான் உள்ளிட்ட பறவைகள் பல ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. அதேபோல, முதல்முறையாக கடந்த ஆண்டு வந்த சிவப்பு வால் கீச்சான் பறவைகளும் தற்போது வரத் தொடங்கியுள்ளன.

பூநாரைகள் ஒரே இடத்தில் அமர்ந்து இரை தேடுவதையும், திடீரென அவை ஒரே நேரத்தில் சிறகடித்து பறப்பதையும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் மகிழ்ந்து வருகின்றனர்.

இந்தச் சரணாலயத்துக்கு வரும் பறவைகள் குறித்து கடந்த ஆண்டு முதல் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த நாடுகளிலிருந்து பறவைகள் வருகின்றன? பறவையின் எடை, அலகின் நீளம், இறகின் நீளம், காலின் உயரம், என அனைத்தும் குறிப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் பறவைகள் முழுமையாக வந்த பின்னர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, புதிதாக பறவைகள் வந்துள்ளதா?, எந்த பறவைகள் அதிகம் வந்துள்ளது?, எந்த நாட்டில் இருந்து வந்துள்ளது என்பது பற்றிய விவரங்கள் கணக்கெடுக்கப்படும் என பறவை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT