சுற்றுச்சூழல்

ஆனைமலை அருகே தனியார் தோட்ட சூரிய மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஆனைமலை அருகே தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட சரளப்பதி பகுதியில் பிரபு என்பவரது தோட்டத்தில். காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற் கொண்டனர். இதில் உயிரிழந்தது பெண் காட்டு யானை என தெரியவந்தது.

          

அந்த யானையின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததையும், சூரிய மின்வேலி மீது விழுந்து இறந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வனக் கால்நடை உதவி மருத்துவர் மெய்யரசன், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் க.ரஞ்சித், கோவை வன உயிரின குற்ற தடுப்புப் பிரிவு வனச் சரக அலுவலர் ஜி.நிர்மலா, பொள்ளாச்சி வனப் பாதுகாப்புப் படை வனச்சரக அலுவலர், சரவணக்குமார் மாரப்ப கவுண்டன் புதூர் கிராம நிர்வாக அலுவலர் எஸ்.ராதிகா, மின்வாரியத் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் களப் பணியாளர்கள் முன்னிலையில் யானைக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பெண் காட்டு யானையின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை வன விலங்கு பாதுகாப்புக்கான மேம்பாட்டு நிறுவன ஆய்வகம், கோவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உடற்கூராய்வின் முடிவில், இறந்த யானைக்கு வயது சுமார் 45 இருக்கலாம் என்றும், சூரிய மின்வேலியில் சிக்கிய யானையால் திரும்ப செல்ல முடியாமல் இறந்திருக்கலாம் என்றும் மருத்துவக் குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடற்கூராய்வு நிறை வுக்கு பின் இறந்த யானையின் உடல் வன விலங்குகளுக்கு உணவாக வனப் பகுதியிலே விடப்பட்டது. இறந்த யானை யிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு ஜோடி உலிக்கொம்புகள், வனச்சரக அலுவலகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. யானை உயிரிழப்பு குறித்து பொள்ளாச்சி வனத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT