வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், கடல் போல் காட்சியளிக்கும் புழல் ஏரி. | படம்: இரா.நாகராஜன் |
திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், புழல் உள்ளிட்ட சென்னைக் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை -தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 1,126 கன அடி, பூண்டி ஏரிக்கு 520 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 385 கன அடி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 65 கன அடி, சோழவரம் ஏரிக்கு 55 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.
3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 2,248 மில்லியன் கன அடி, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,435 மில்லியன் கன அடி என நீர் இருப்பு உள்ளது.
3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 468 மில்லியன் கன அடி, 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 236 மில்லியன் கன அடி, 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 138 மில்லியன் கன அடி என, நீர் இருப்பு உள்ளது.