கோடை சீசன் என்பதால் ஊட்டி பைகாரா ஏரியில் படகு போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பைகாரா ஏரியில் படகு சவாரிக்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திர படகுகள் பயன்படுத்தப்படுவதால் வனப்பகுதியில் ஒலி மாசு ஏற்பட்டு வனவிலங்குகள் பாதிக்கப்படு வதுடன், ஏரி நீரும் மாசடைந்து வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் படகு சவாரி செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சுற்றுச்சூழல் மாசுவை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனம் மற்றும் ஊட்டியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து பைகாரா ஏரியில் மோட்டார் இயந்திர படகுகளின் ஒலி அளவு, ஏரி நீரின் மாசு ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது பைகாரா ஏரி ஆய்வு தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட வில்லை. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அதிகாரிகளும் ஆஜராகவில்லை. அதையடுத்து நீதிபதிகள் பைகாரா ஏரி தொடர்பான தங்களது முந்தைய உத்தரவை சம்பந்தப்பட்ட சலீம் அலி பறவை யியல் கல்வி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி (ஐசிஏஆர்) நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க கோவை மற்றும் நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவுப்படி நிபுணர்களை நியமித்து அந்த நிறுவனங்கள் பைகாரா ஏரியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், அதுவரை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தும் விசாரணையை தள்ளிவைத்திருந்தனர்.
ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு: இந்நிலையில் இந்த வழக்கு இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்கெனவே பைகாரா ஏரியில் படகு போக்குவரத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை சீசன் என் பதால் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பைகாரா ஏரியில் நீர் மாசு மற்றும் ஒலி மாசு தொடர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக அறிக்கைக்காககாத் திருக்கிறோம். அந்த அறிக்கை வந்த பிறகு தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.