சென்னை: துறைமுகத்தில் வெண்புகை வெளியேற காரணம் என்ன என்பது குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுக வளாகத்தில், கப்பலில் கொண்டுவரப்பட்ட கந்தகம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2 வாரங்களாக சென்னையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த கந்தகம், கடும் வெப்பம் காரணமாக வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகி காற்றில் வெண்புகையாக பறந்தது.
இதனால், துறைமுக வளாகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டது. தலைமைச் செயலகத்துக்கு எதிரே வாகன நிறுத்துமிடம், காமராஜர் சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள ஆர்பிஐ அலுவலகம் அருகில் புகை பரவியது.
காற்றில் பரவிய இந்த புகையால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், முதல்வர் தனிப்பிரிவில் புகார் மனு அளிக்க வந்த பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் திணறல், இருமல், மற்றும் கண் எரிச்சலால் அவதிப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து துறைமுக அதிகாரிகள் உடனடியாக ரசாயன பொடிகளைத் தூவி, புகை வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். புகை வெளியேறிய பகுதியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, புகை வெளியேறியதற்கான காரணம் குறித்து அரசுக்கு அறிக்கை அளித்தனர்.
துறைமுக நிர்வாகத்துக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினர். இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளியானது. அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது.
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “வாயுக்கசிவு தொடர்பாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எதனால் வாயுக்கசிவு ஏற்பட்டது, கந்தகத்தை பாதுகாப்பாக சேமிப்பதற்கான வழிமுறைகள், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், கந்தகத்தை கையாளும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து அறிக்கையில் இடம்பெற வேண்டும்” என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.