சுற்றுச்சூழல்

ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் 2-வது நாளாக எரியும் காட்டுத்தீ: வனத்துறை விசாரணை

அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் நேற்று மாலை பற்றிய காட்டுத்தீ இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து எரிந்து வருவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டுக்கு சென்ற பக்தர்கள் மலையில் தீ மூட்டி உணவு சமைத்தால் காட்டுத்தீ பரவியதாக கூறப்படுவதால் வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி மலையின் தொடர்ச்சியாக உள்ள பெருமாள் மொட்டை என்ற மலை உச்சியில் பெருமாள் சந்நிதி உள்ளது. மண்டபம் போன்ற கட்டுமானம் இல்லாமல் பீடத்தில் பெருமாள் சிலை மட்டும் உள்ளது. மலைக்கு செல்லும் வழியில் கருப்பசாமி, சாஸ்தா, ஆஞ்சநேயர் சிலைகளும் உள்ளன.

புரட்டாசி சனிக்கிழமைகளில் மதுரை, விருதுநகர், தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று வழிபாடு நடத்துவர். நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று வழிபாடு நடத்திய நிலையில், மாலையில் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மலையில் விறகு சேகரித்து தீ மூட்டி உணவு சமைத்ததாலேயே காட்டுத்தீ பரவியதாக கூறப்படுகிறது.

வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மலை முழுவதும் காட்டுத்தீ பரவி தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பற்றி எரிந்து வருவதால் வனவிலங்குகள் மற்றும் அரிய வகை மூலிகைகள் கருகி வீணாகும் சூழல் நிலவுவதால் வன உயிரின ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT