மதுரை: யானை இன்று தவிர்க்க முடியாத ஒரு காட்டு விலங்கு. காட்டு உயிர் என்பதைத் தாண்டி, நீண்ட நெடுங்காலமாக நாய், பசு போன்று மனிதர்களிடம் அறிமுகமான விலங்கினம். யானையை பாரம்பரிய கலாச்சார சின்னமாகப் பார்ப்பதால் நாட்டில் 2010 அக். 22-ம் தேதி தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்டது.
காடுகளில் 15 வகை உயிரினங் கள் யானைகளின் சாணத்தைச் சார்ந்துள்ளதாக வனவியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்தியக் காடுகளில் 30 ஆயிரம் அளவில் யானைகள் தென்படு வதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2023-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில், 2,761 யானைகள் உள்ளன.
தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழகம், கேரளாவில் அதிகளவில் உள்ளன. உலக அளவில் ஆப்பிரிக்கா, ஆசியாவில் மட்டும்தான் யானை இருக்கிறதா என்றால் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடல் பகுதியைத் தவிர்த்து பரவலாகக் காணப்பட்ட இனமாகக் கருதப்பட்டுள்ளது.
யானைகளில் பல இனங்கள் இருந்துள்ளன. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் அருகி தற்போது ஆப்பிரிக்காவில் 2 உட்பிரிவு இனம், ஆசியாவில் 5 உட்பிரிவு இன யானைகள் மட்டுமே உள்ளன.
இந்தியாவில் 60% யானைகள் இதுகுறித்து அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் கூறியதாவது: ஆசிய யானைகளைவிட ஆப்பிரிக்க யானைகள் கம்பீரமாக, உயரமாக இருக்கும்.
ஆப்பிரிக்கக் காடுகளில் உள்ள யானைகள் திறந்தவெளி, புல்வெளிகளில் இருக்கும் யானைகள் என பிரிவாக உள்ளன. இந்த இரண்டுக்கும் உருவ வேறுபாடுகள் உள்ளன.
ஆனால், ஆசியாவை எடுத்துக் கொண்டால் இலங்கை, பூடான், நேபாளம், பர்மா, இந்தோனேசியா, கம்போடியா நாடுகளிலும் யானை இனங்கள் இருக்கின்றன. ஆசியாவில் உள்ள காடுகளில் வசிக்கும் யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் மட்டுமே உள்ளன. அந்தளவுக்கு இந்தியாவின் காடு கள் பரவலாகவும், வளமாகவும் இருப்பதைத்தான் காட்டுகிறது.
ஆசியாவைத் தவிர மற்ற நாடுகளில் யானையை காட்சிப்பொருளாகவும், தங்கள் தேவைகளுக்கான வேலைகளுக்குப் பழக்கப் படுத்தி அதனை கேளிக்கை விலங்காக அதன் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் வைத்துள்ளனர்.
ஒரு காலத்தில் மனிதன் வேட்டையாடியாக யானையைப் போன்ற பேரு யிரைத் தந்திரமாக வீழ்த்தி பனிக்காலத்தில் உணவுத் தேவைக் காகப் பயன்படுத்தி உள்ளான். பனிக்காலத்தில் இறைச்சி கெட்டுப் போகாது என்பதால் யானையைப் பெரிய வரமாகப் பார்த்துள்ளனர்.
அதன் தோலை குளிரைத் தாங்கும் உடையாகவும், வீடுகளுக்குக் கூரையாகவும் பயன்படுத்தி உள்ளான். போர்க்கருவியாக யானைகள் சுமார் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யானை மனிதர்களோடு கலந்துவிட்ட உயிரினமாகக் கருதப்படுகிறது.
மன்னர் காலத்தில் போர்க்கருவியாக யானைகள் பார்க்கப்பட்டன. அரண் மாதிரி யானைகளை நிறுத்தி வைத்து அலெக்சாண்டரை போர்களில் வென்றது இந்தியர்களின் யானைப்படை என்றே சொல்லலாம்.
இந்தக் காலக்கட்டத்தில் யானையை உணவாகப் பார்க்காமல் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். தங்களைக் காக்கும் கேடயமாகவும் மன்னர்கள் யானைகளைப் பார்க்கத் தொடங்கினர்.
வழிபாட்டில் பார்க்கும்போது இந்து, புத்தம், சமணம் போன்றவை யானையைத் தெய்வீக அம்சம் கொண்ட உயிராகப் பார்க்கின்றன. யானை 10 அடியில் இருந்து 12 அடி உயரத்துக்கு கம்பீரமானது.
தற்போது இந்தியக் காடுகளில் 12 அடி யானைகளைப் பார்ப்பது கேள்விக்குறி ஆகிவிட்டது. பல யானைகள் முழு வளர்ச்சியை அடையும் முன்பே இறப்பைச் சந்திக்கக்கூடிய அவலம்தான் நம்முடைய காடுகளின் நிலை உள்ளது. யானைகளின் வாழ்விடம் குறுகலாகச் செல்வதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தேசத்தின் நுரையீரல் ஆசிய யானைகளின் தந்தம் பல வடிவங்களில் உள்ளன. சில ஆண் யானைகள் தந்தங்களே இல்லாமல் பிறக்கக் கூடியவையாக உள்ளன. அதனை மக்னா யானை என்று கூறுவார்கள்.
இந்த யானை அதிகபட்சம் அமைதியான சுபாவம் கொண்டவையாகத்தான் இருக்கும். ஆனால், எரிச்சல் ஊட்டினாலோ, இனப்பெருக்கக் காலத்தில் தடைகளுக்கு மத்தியில் இருந்தாலோ அவை ஆத்திரப்படக் கூடியவை.
காடுகளை தேசத்தின் நுரையீரலாகப் பார்க்கிறோம். அந்த நுரையீரல் கெட்டுப்போகாமல் இருக்க யானைகளைப் பாதுகாக்க வேண்டும்.
யானைகளை காட்டின் தோட்டக் காரர்கள் என்று சொல்லலாம். யானைகள் காடுகளில் விதைப் பரவலுக்கு முக்கியக் காரணமாக உள்ளன.
யானைகள் வாழ்நாள் முழுவதும் இடம்பெயர்ந்து கொண்டே செல்லும். யானைகள் இல்லாத காடு வளமில்லாத காடுகளாகத்தான் பார்க்க முடியும் என்பதால் காடுகள் இருக்கிறவரை யானைகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.