காவிரி வடக்கு வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட அஞ்செட்டி வனச்சரகம் ராசி மணல் வழியாக செல்லும் காவிரி ஆறு. (கோப்பு படம்)

 
சுற்றுச்சூழல்

தமிழக - கர்நாடக வனப்பகுதிகளில் வறட்சி: காவிரி ஆற்றை நோக்கி இடம்பெயரும் யானைகள் கூட்டம்!

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: தமிழக மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், இருமாநில யானைகளும் காவிரி ஆற்றை நோக்கி இடம்பெயரத் தொடங்கி யுள்ளன. கோடை காலம் முடியும் வரை வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கர்நாடக அணைகளில் இருந்து குறைந்த அளவு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட உரிகம் மற்றும் அஞ்செட்டி வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே ராசிமணல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து பிலிகுண்டுலு வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.

          

காவிரியின் ஒரு கரை பகுதி தமிழக வனப்பகுதியும், மறுகரை கர்நாடக வனப்பகுதியையும் உள்ளடக்கியது. இவ்விரு மாநில வனப்பகுதிகள் யானைகள், சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாகவும், இவ் விலங்குகளுக்கு காவிரி ஆற்று நீர் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தற்போது, கோடைக்கு முன்னர் இருமாநில வனப் பகுதியிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் நீர் திறப்பு குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து, சிறு ஓடை போல மாறியுள்ளது. இதனால், வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வறண்ட காவிரி ஆற்றின் வழியாக இருமாநில வனவிலங்குகள் இடம்பெயர்வதோடு, ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங் களுக்குள் வன விலங்குகள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: கோடைக்கு முன்னரே காவிரி ஆற்றில் நீர்வரத்தின்றி வறண்டுள்ள நிலையில் வன உயிரினங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது, ஓசூர் வனக்கோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவை தண்ணீருக்காக காவிரி ஆற்றங்கரை பகுதிக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

காவிரியில் போதிய நீர் இல்லாத நிலை ஏற்பட்டால், அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அபாயம் உள்ளது. இதனால், யானை-மனித மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக மற்றும் கர்நாடகா வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள நீர்க் குட்டைகளை தூர்வாரி நீரை நிரப்ப வேண்டும்.

கோடை காலம் முடியும் வரை கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் குறைந்தளவு தண்ணீர் திறக்க வேண்டும். மேலும், வனப்பகுதியில் தீவனப்புல் சாகுபடிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக வனத்துறை யினர் கூறியதாவது: தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்துள்ள தால், வலசை யானைகள் மற்றும் நிரந்தரமாக உள்ள யானைகள் இப்பகுதியை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

இதனால் காவிரி வடக்கு சரணாலயத்திற்குட்பட்ட உரிகம் மற்றும் அஞ்செட்டி வனச்சரகத்தில் யானைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல கோடை காலங்களில் வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, வனத்தில் எந்த பகுதிகளில் யானைகள் இருந்தாலும், காவிரி ஆற்றை நோக்கி இடம்பெயரும். ஆற்றையொட்டி யானைகளுக்கு தேவையான உணவுகளும் கிடைத்துவிடும்.

இதனால், கோடை காலம் முடியும் வரை யானைகள் காவிரி ஆற்றுப்பகுதியையொட்டியே சுற்றித் திரியும். கர்நாடகா அரசு அம்மாநிலத்திற்கு உட்பட்ட வனவிலங்குகளுக்கு தேவை யான தண்ணீரை அணைகளில் இருந்து ஆற்றில் திறந்து விடுவார்கள்.

அப்போது தமிழக காவிரி ஆற்றிலும் ஓரளவுக்கு தண்ணீர் வரும். அந்தத் தண்ணீரே வனவிலங்குகளுக்கு போதுமானதாக இருக்கும். இருப்பினும் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி நீர் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT