சுற்றுச்சூழல்

எல்-நினோ தாக்கம்: பொள்ளாச்சி பகுதியில் தேங்காய் விளைச்சல் சரிவு!

60% கொப்பரை களங்கள் மூடல்

எஸ்.கோபு

பொள்ளாச்சி: எல்​-நினோ தாக்கத்தால் பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 60 சதவீத கொப்பரை உற்பத்தி களங்கள் மூடப்​பட்​டுள்ளன. மேலும் வரும் ஜனவரி மாதத்தில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று​வட்டார பகுதி​களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

தேங்காயில் இருந்து கொப்பரை, பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்​கப்​படு​கின்றன. இந்நிலையில் எல்-நினோ தாக்கத்தால் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்ளது. இதன் காரணமாக தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. இதேபோல் கொப்பரை உற்பத்​தியும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்ளது. இதனால் பெரும்​பாலான கொப்பரை உற்பத்தி களங்கள் மூடப்​பட்​டு​விட்டன.

இதுகுறித்து கொப்பரை தேங்காய் உற்பத்​தி​யாளர்கள் மற்றும் விவசா​யிகள் கூறிய​தாவது: ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரை தேங்காய் சீசன் இருக்கும். தற்போது சீசன் முடிந்​ததால் தேங்காய் உற்பத்தி குறைந்​துள்ளது. வழக்கமாக ஆடி மாதம் தென்னை மரங்களில் பாளைகள் வந்து விடும். ஆனால் தற்போது எல்-நினோ தாக்கத்தால் பாளைகள் உதிர்ந்து விடுகின்றன.

இதனால் தேங்காய் விளைச்சல் பாதிக்​கப்​பட்​டுள்ளது. ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தென்னை மரங்களுக்கு முக்கிய​மான​தாகும். ஆனால் தற்போது வரை 5 சதவீதம் அளவிற்கு தான் பருவமழை பெய்து உள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் காரணமாக வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்​களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும்.

வெளிநாடு​களிலும் இதே நிலை உள்ளதால், அங்கிருந்தும் தேங்காய் இறக்குமதி செய்ய முடியாது. மேலும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, முகூர்த்த நாட்கள் வருவதால் தேங்காய்க்கான தேவை அதிகரிக்​கும். தேங்காய் விளைச்சல் குறைந்​ததால் கொப்பரை உற்பத்தி களங்கள் 60 சதவீதம் மூடப்​பட்​டு​விட்டன. மீதமுள்ள 40 சதவீத களங்களும் இந்த (செப்​டம்பர்) மாதத்​துக்குள் மூடப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வேலை இல்லாமல் வடமாநில தொழிலா​ளர்கள் மாற்று தொழிலுக்​கும், சொந்த ஊருக்கும் திரும்பி செல்கின்​றனர்.

தனியார் நிறுவனங்​களுக்கு குடோன் வசதி உள்ளதால் கொப்பரை விலை குறைவாக இருக்​கும்​போது, விவசா​யிகளிட​மிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து இருப்பு வைத்து​விட்​டனர். மத்திய, மாநில அரசிடமும் கொப்பரை கையிருப்பு உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.156-க்கு விற்பனை ஆன கொப்பரை தற்போது ரூ.163 முதல் ரூ.170 வரையும், ஒரு டின் தேங்காய் எண்ணெய் ரூ.3,250-ல் இருந்து ரூ.3,600 வரையும் விலை உயர்ந்​து​விட்டது.

தேங்காய் (கருப்பு) டன்னுக்கு ரூ.60 ஆயிரமும், பச்சை ரூ.54 ஆயிரத்​துக்கும் விற்பனை ஆகிறது. பொள்​ளாச்சி பகுதி தென்னை விவசா​யிகளுக்கு ஆண்டு​தோறும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை​யும், அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்​கும். ஆனால் இந்த ஆண்டு எல்-நினோ தாக்கத்​தால், பருவமழை எதிர்​பார்த்த அளவு பெய்ய​வில்லை.

வெப்பத்தின் காரணமாக தென்னை மரங்களில் இருந்து குரும்​பைகள் உதிர்​கின்றன. இதனால் அடுத்த ஆண்டில் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்​கப்​படும். சர்வதேச அளவில் தேங்காய் உற்பத்தி அதிகம் நடைபெறும் பிலிப்​பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளில் வெப்பத்தால் உற்பத்தி குறைந்து விட்டது. நம் நாட்டில் கர்நாடக மாநிலம் மற்​றும் பொள்​ளாச்​சி​யில் தேங்​காய் விளைச்சல்​ குறைந்​துள்ளது. இவ்வாறு அவர்கள்​ கூறினர்.

SCROLL FOR NEXT