சுற்றுச்சூழல்

அந்நிய மரங்கள் வளராமல் தடுக்க தொடர் பராமரிப்பு நிதியை விடுவிக்காதது ஏன்? - வனத்துறை செயலர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

அகற்றப்பட்ட அந்நிய மரங்கள் மீண்டும் வளராமல் தடுக்க தொடர் பராமரிப்பு நிதியை விடு விக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக வனத்துறைச் செயலர் சுப்ரியா சாஹு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

வனம் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

          

அப்போது வனப்பகுதிகளில் அகற்றப்படும் சீமைக் கருவேலம் மற்றும் அந்நிய மரங்கள் மீண்டும் வளராமல் தடுக்க தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அந்நியமரங்கள் மீண்டும் வளர்ந்து விட்டால், இதுவரை எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் முழுவதுமாக வீணாகி விடும். தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய நிதியை, மாநில அரசு, இதுவரை விடுவிக்கவில்லை என நீதிமன்றத்துக்கு உதவும் நபர்களாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

அப்போது வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன், "ஏற்கெனவே பராமரிப்பு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நிதியை விடுவிக்கவும் கடந்த ஆண்டு நவம்பரில் பரிந்துரைக் கப்பட்டுள்ளது. நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்ததும் தொடர்பராமரிப்பு நிதி விரைவில் விடுவிக்கப்படும்" என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், வனத்துறையில் கஷ்டப்பட்டு அகற்றப்படும் அந்நிய மரங்கள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தால் மாநில அரசு இதுவரை ஒதுக்கிய அனைத்து நிதியும், பணிகளும் பயனற்றுப் போய் விடும். தொடர் பராமரிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியை உடனுக்குடன் விடுவிக்காதது ஏன் ? என கேள்வி எழுப்பினர்.

பிறகு இது தொடர்பாக தமிழக வனத்துறைச் செயலர் சுப்ரியா சாஹு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT