சுற்றுச்சூழல்

ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரம்பலூருக்கு வலசை வந்த பறவைகள்!

எஸ்.ஸ்டாலின்

பெரம்பலூர்: ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பெரம்பலூர் பாண்டகப்பாடி ஏரிக்கு வலசை வந்த பறவைகளால் சூழலியல் ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் மகழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் பாண்டகப்பாடி ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றுவது இல்லை. ஏற்கெனவே 30 விழுக்காடு நீர் இருப்பு இருந்த நிலையில், பச்சைமலைத் தொடர் பகுதியில் பெய்த மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த இடமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாண்டகப்பாடி ஏரியை நோக்கி வெளிநாடுகளில் இருந்து வலசைக்காக பறவைகள் வந்திருப்பது சுற்றுலாப் பயணிகள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பாண்டகப்பாடி ஏரிக்கு உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காவும் பறவைகள் வலசை வந்துள்ளன.

‘எல் நினோ’ காலநிலை தாக்கம் காரணமாக, தமிழகம் முழுவதும் பறவைகள் வலசை வருவது குறைந்திருக்கும் நிலையில், பெரம்பலூருக்கு பாண்டகப்பாடி ஏரிக்கு வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், எல் நினோ தாக்கத்தால் பல இடங்களில் நீர் நிலைகளை தண்ணீர் இன்றி வறண்டு விடுவதுடன், விவசாய நிலங்களில் பூமி வெடிப்பு ஏற்பட்டு, பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் பாண்டகப்பாடி ஏரிக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வந்திருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது, சுமார் 20,000 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து பாண்டகப்பாடிக்கு பறவைகள் வலசை வந்துள்ளன.

குறிப்பாக சைபீரியன் கொங்கு (செங்கால் நாரை), யூரேசியா ஸ்பூன்சில் (கரண்டி வாயன்) ஆகிய 2 பறவைகள் இடம்பெற்றுள்ளன. 1000-க்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன.

இந்தப் பறவைகள் வானில் வட்டமிடுவது, ஒற்றை காலில் நின்று மீன்களை சாப்பிடுவது காண்போரை கவர்ந்து வருகிறது. ஏற்கெனவே வேப்பந்தட்டை தாலுகாவில் பச்சைமலைத் தொடர் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பாண்டகப்பாடி ஏரியில் பறவை வலசை வந்திருப்பதால், அதனை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT