குற்றாலத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை.
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வல்லம் பகுதியில் விவசாய நிலம் அருகே காயமடைந்த நிலையில் யானைக் குட்டி ஒன்று நின்றிருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். அதன் தாய் யானை காப்புக்காடு எல்லை அருகே இருப்பது கண்காணிக்கப்பட்டதை தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டது.
கால்நடை மருத்துவர்களின் பரிசோதனையில், யானைக் குட்டியின் வயிற்றுப் பகுதி, துதிக்கை மற்றும் பின்காலில் காயங்கள் மற்றும் கடுமையான தொற்று இருப்பதும், பின்காலில் வீக்கம் காணப்பட்டதும் தெரியவந்தது. எனவே சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் தாய் யானை மற்றும் அதனுடன் வந்த மேலும் இரண்டு யானைகள், யானை குட்டியை அணுகி வெற்றிகரமாக மீண்டும் கூட்டத்துடன் இணைத்துச் சென்றன. யானைகளின் குரல் ஒலிகள், காலடித்தடங்கள் மற்றும் கள ஆய்வின் மூலம் இந்த இணைப்பு உறுதி செய்யப்பட்டது. களப்பணியாளர்கள் நேற்று மேற்கொண்ட ஆய்வில், யானைகள் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.