சுற்றுச்சூழல்

முதல் நண்பன் 02: ஆட்டுக்கும் நாய்க்கும் ஒரே பெயர்

இரா.சிவசித்து

கா

ற்றைக் கிழித்துச் செல்லும் அதிவேக ஒட்டம், இந்த நாய் இனத்தைப் முதல்முறையாகப் பார்ப்பவர்களுக்கு பெரும் வியப்பைத் தரும் - இதுதான் கன்னி என வழங்கப்படும் நாட்டு நாய் இனத்தின் தனித்தன்மை.

நல்ல கூரான நீண்ட முகம், சிறிய தலை, நன்கு கீழிறங்கிய மார்பு, மெலிந்த-நீளமான உடல், மிகக்குறைந்த ரோமம், நீண்ட மெல்லிய வால் ஆகியவற்றுடன் கன்னி நாய் அமைந்திருக்கும்.

மேற்கூறிய தோற்றத்துடன் கருப்பு நிறத்தில் இருந்தது கன்னி எனப்பட்டது. அதே தோற்றத்துடன் வேறு நிறத்தில் இருந்தால், அது ‘சிப்பிப்பாறை’ என்று முன்பு கூறப்பட்டுவந்தது. பின்னர், இரண்டு நிறம் கொண்டவையும் ஒரே வகைதான், நிறம் மட்டுமே மாறுபடுகிறது என்று கருதப்பட்டது. அது மட்டுமல்லாமல், இவற்றுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டுவந்தன: பொடித்தல நாய், ஊசிமுஞ்சிநாய், கூழைவால் நாய், குவளைவாய் நாய், மொசக்கடி நாய், குருமலை நாய், குருந்தன்மொழி நாய், தோல்நாய்...

23chnvk_kanni2.jpg

விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை ஊரைச் சார்ந்த சாம்பல் நிற நாய்கள் மூலமாகத்தான் இந்த நாய்களுக்கு சிப்பிப்பாறை என்ற பெயர் முதலில் வந்தது. நாளடைவில் அந்த நாய்கள் அழிந்துபோக சிப்பிப்பாறையைச் சுற்றியிருந்த ஊர்களைச் சேர்ந்த மற்ற நாய்களுக்கும் அதே பெயர் வழங்கப்பட ஆரம்பித்தது. உண்மையான சிப்பிப்பாறை நாய்களைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

இந்த நாய்க்குக் கன்னி என்று பெயர் வந்ததற்கு என்ன காரணமாக இருக்கும்? திருமணத்தின்போது சீதனமாக இந்த நாயைக் கொடுப்பதால், இதற்குக் ‘கன்னி’ என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அது கட்டுக்கதை.

இந்த நாய்களை ‘பொலிகார்ஸ் ஹவுண்ட்’ என்றே ஆங்கிலேயர்கள் அழைத்தனர். எந்த இனக்குழு இந்த நாய்களை ஆதியில் அறிமுகம் செய்ததோ, அந்த இனக்குழுவின் பெயருடன் சேர்த்து அழைப்பது ஆங்கிலேயர்களின் வழக்கம்.

நாயக்கர் ஆட்சியின்போது மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு அதற்கானத் தளபதிகளை நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அந்தத் தளபதிகள்தான் பொலிகார்கள். ஃபிளாரென்ஸ் அம்ஹெர்ஸ்ட் என்பவர், 1909-ம் ஆண்டு வெளியான தனது ‘ஓரியண்டல் கிரேஹவுண்ட்ஸ்’ எனும் கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

“பொலிகார் நாய்கள் மதராஸ் மாகாணத்துக்கு உரியவை. அவை தாங்கிவரும் பெயர் ஆந்திர, கர்நாடகப் பகுதியிலிருந்து வந்த படைகளின் தலைவர்களுடையவை. அவர்களே இந்த நாயின் அசலான உரிமையாளர்கள். அவை ரோமம் அற்ற தோலும் உடல் வலுவும் கொண்டவை. அதன் தோற்றம் ‘கிரேஹவுண்ட்’ நாய்களைப் போன்றதாக உள்ளது”.

அதற்கும் 70 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு ஒன்றில் ‘பொலிகார்கள், வேட்டையாடுவதில் அதிகம் உவகை கொண்டவர்கள். அதனால் அதிகளவு நாய்களை வைத்திருந்தார்கள். அத்துடன் கால்நடைகளையும் நாய்களையும் அடிக்கடி பண்டமாற்றம் செய்துகொண்டனர். அவர்கள் தெலுங்கு மொழி பேசும் கம்பளத்தார்கள்’ என்று கிழக்கிந்தியக் காலனி இதழின் 10-வது தொகுப்பில் ‘அக்கவுண்ட்ஸ் ஆஃப் தொட்டியர்ஸ்’ என்ற கட்டுரையில் கூறப்படுகிறது.

இன்றளவிலும் கம்பளத்து நாயக்கர்கள் வாழும் கிராமங்களில் இந்த நாய்கள் அதிகளவில் காணப்படுவதே இதற்குச் சாட்சி. அவர்களிடமிருந்து, இடையர் குல மக்களிடம் இந்த நாய்கள் அதிக அளவில் பரவின. இடையர்கள் மூலம் வந்த பெயர்தான் ‘கன்னி’.

கன்னி என்பது நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஆட்டு இனம். இவை கரு நிறத்திலும், கண்ணுக்கு மேலேயும், தாடைப் பக்கத்திலும், கால்களிலும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் இருக்கும். அவற்றைப் போன்ற நிறத்தில் இருந்த இந்த நாய்களுக்கும், அதே பெயர் வழங்கப்பட்டது.

(அடுத்த வாரம்: தென்தமிழக அடையாளம்)
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு sivarichheart@gmail.com

SCROLL FOR NEXT