சுற்றுச்சூழல்

குன்னூர் | யானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதி கட்ட அத்துமீறல்: மரங்களை வெட்டி பாதை அமைத்த தனியார் எஸ்டேட் நிர்வாகம்

செய்திப்பிரிவு

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர்‌ நகர பிரிவுக்குட்பட்டது பென்ஹோப்‌ காவல்‌ பகுதி. இங்கு, தனியார்எஸ்டேட் நிர்வாகம் சார்பில் அத்துமீறி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. யானைகள் வலசை பாதையில் குடியிருப்பு மற்றும்சொகுசு விடுதி கட்டப்படவுள்ளதால், யானை வழித்தடம் தடைப்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இயங்கி வந்த தங்கும் விடுதி, யானைகள் வலசை பாதை என அறிவிக்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டது என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, யானைகள் வழித்தடத்தில் கட்டுமானங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், குன்னூர் வனச்சரகர் எஸ்.எம்.சசிகுமார் தலைமையிலான குன்னூர்‌ நகர பிரிவு வனவர்‌, பென்ஹோப் வனக்காப்பாளர்‌, ஊழியர்கள் ஆகியோர், பர்லியாறுகிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்‌ மற்றும்‌ அவரது உதவியாளர்களுடன்‌ சென்று, பர்லியாறு கிராமத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இடத்தில் தணிக்கை மற்றும்‌ விசாரணை நடத்தினர்.

இதில், அப்பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகம் காபி, மிளகு தோட்டங்கள் அமைக்கும்‌ பணிக்காக, இரண்டு கன ரக இயந்திரங்களை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியது தெரியவந்துள்ளது. ஆனால், இந்த அனுமதியை மீறி எஸ்டேட் நிர்வாகம் மரங்களை வெட்டி சாலை அமைத்துள்ளது.

இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் சசிகுமார் கூறும்போது, "வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் வாகை, செந்தூரம்‌, கோலி உள்ளிட்ட காட்டு மரங்கள்‌ வெட்டப்பட்டிருந்தன.

மேலும், சுமார்‌ ஒரு மீட்டர் ஆழத்துக்கு‌ மேல்‌ மண்ணை தோண்டி பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்புலத்தில்‌ பட்டியல்‌ இன மரங்களான ஈட்டி மரங்களும் உள்ளன.

தொடர்ந்து இப்பாதையை விரிவுபடுத்தும்‌பட்சத்தில், இந்த மரங்கள் சேதமடையும் வாய்ப்புகள் உள்ளன. இப்பகுதி யானைகள் வலசை பாதையாகவும் உள்ளது. இதுதொடர்பாக வனத்துறை மூலமாக அறிவிப்பு பலகையும் நிறுவப்பட்டுள்ளது.

இப்புலத்தில்‌ குடியிருப்பு மற்றும் சொகுசு விடுதி கட்டப்பட உள்ளதாக தெரிய வருகிறது. கட்டிடம்‌ கட்டும்‌பட்சத்தில்‌, யானைகள்‌ தங்கள்‌ வலசை பாதையை மாற்றி, அருகே புதுக்காடு மற்றும்‌குரும்பாடி பழங்குடியின கிராமங்களுக்குள் அல்லது குன்னூர் நகர குடியிருப்பு பகுதிகளுக்குள்நுழைந்து மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, மனித - விலங்கு மோதல்‌, மண்‌ அரிப்பு மற்றும்‌ பட்டியல்‌ இன மரங்களை காக்கும் வகையில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும்‌, அப்பகுதியை ஆய்வு செய்து அத்துமீறல்களை கண்டறிய வேண்டுமென, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் பாதையை சமன்‌ செய்யும்‌ உத்தரவில், "மரங்கள்‌ மற்றும்‌ வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம்‌ வழிமுறைகளை தவறாது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT