ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வனத்துறை சார்பில் சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க ‘தொங்கும் சோலார் மின் வேலி’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் வனப்பகுதியிலிருந்து யானைகள் உள்ளிட்ட விலங்குகள், உணவு மற்றும் தண்ணீருக்காக கிராமங்களுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமபட்டினம்புதூர், தா.புதுக்கோட்டையில் யானை தாக்கி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். தற்போது ஆயக்குடி, கோம்பைப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க முதல் கட்டமாக வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் 2 கி.மீ. தூரத்துக்கு ‘தொங்கும் சோலார்’ மின் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதை தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில், வனப்பகுதியை விட்டு வெளியே வர முயலும் காட்டு யானைகள் தொங்க விடப் பட்டுள்ள கம்பியில் தொடவோ, உரசவோ செய்தால் சோலார் மின் வேலியிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில் சிறு அளவிலான மின்சாரம் பாயும்.
இதனால் யானைகள் அப்பகுதியில் இருந்து விலகிச் சென்று விடும். இந்த வகை சோலார் மின் வேலியை விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.