சுற்றுச்சூழல்

உடுமலை வட்டாரத்தில் சிறுத்தை நடமாட்டம்? - கால்நடைகள் உயிரிழப்பால் விவசாயிகள் கலக்கம்

செய்திப்பிரிவு

உடுமலை: கடந்த சில நாட்களாக கால்நடைகளின் உயிரிழப்பால், உடுமலை வட்டாரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே இரவில் மர்ம விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சின்னவீரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தோட்டச்சாளைகளில் அடைக்கப்பட்டிருந்த பசு கன்றுகள், மர்ம விலங்குகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன.

பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள் சிலருக்கு சொந்தமான 3 பசு கன்று குட்டிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில், மர்ம விலங்குகள் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கால்நடை மருத்துவர்களின் ஆய்வுக்கு பிறகு அவை புதைக்கப்பட்டன.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, "முன்னதாகவோ தாந்தோணி, துங்காவி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏராளமான ஆடுகள் உயிரிழந்துள்ளன. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவே தோன்றுகிறது.

ஆனால், தெருநாய்களாக இருக்கலாம் என்றே வனத்துறையினர் கருதுகின்றனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த ஓராண்டாக மட்டும் அதிக அளவிலான கால்நடைகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்திருப்பது ஏன் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

வனத்துறை சார்பில் நடைபெறும் பணிகள் திருப்தியாக இல்லை. அவர்கள் வைத்த கேமராக்களில் மர்ம விலங்கின் நடமாட்டம் தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT