சென்னை: வன பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் உட்பட 18 கட்சி தலைவர்கள், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு கடந்த மார்ச் 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த வன பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவில், காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த சட்டத்துக்கு இந்தியில் பெயர் வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதற்கு இந்த சட்டம் விலக்கு அளிக்கிறது.
தேனி மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்துதான், மாநில அரசால் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட பிறகும் கூட மத்திய அரசால் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. தேச முக்கியத்துவம் என்ற பெயரில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது காடுகளை துண்டாக்கும் முயற்சி.
தனியார் காடுகளுக்கு வன பாதுகாப்பு சட்டத்தில் விலக்கு அளித்தால் மரங்கள் வெட்டப்படும். இதனால் ஏற்படும் மண் அரிப்பு காரணமாக காப்புக் காடுகளின் சூழல் தன்மை பாதிக்கப்படும். காடு சார்ந்த வளங்கள், கனிமங்களை ஆய்வு செய்வதற்கு நில அதிர்வு சோதனை மேற்கொள்வதை காடுகள் பாதுகாப்பு சார்ந்த திட்டமாக அரசால் அறிவிக்க முடியும் என கூறியிருப்பது தேசிய காடுகள் கொள்கைக்கு எதிரானது.
இந்த சட்டம் மூலம் கிராமசபை ஒப்புதல் இல்லாமலேயே திட்டங்களுக்கு மத்திய அரசால் அனுமதி வழங்க முடியும். மேலும் வன உயிரியல் பூங்காக்கள், வன உலாக்கள் போன்றவற்றை தனியாருக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு காடழிப்புக்கு வித்திடும் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த சட்டத்துக்கு எதிராக மாநில அரசும் தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.