கோவை: கோவை ஆனைகட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில், யானை தாக்கி ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷால் ஸ்ரீமல் (23). இவர் தனது ஆராய்ச்சி படிப்புக்காக கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் தங்கி பயின்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு விஷால் ஸ்ரீமல் தனது நண்பருடன் சாப்பிட்டுவிட்டு, விடுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். செல்லும் வழியில் ஒற்றை ஆண் யானை இருந்ததை கண்டு விஷால் ஸ்ரீமலும், அவரது நண்பரும் தப்பியோட முயன்றனர்.
அப்போது, கீழே விழுந்த விஷாலை யானை தாக்கியதில், மார்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. நண்பர் தப்பியோடிவிட்டார். அவர் தகவல் அளிக்கவே, அருகில் இருந்தவர்கள் வந்து யானையை விரட்டிவிட்டு விஷாலை மீட்டு கேரள மாநிலம், கோட்டத்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விஷால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை விஷால் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வனத்துறையி னர் கூறும்போது, “யானை தாக்கி உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையில், உயிரிழந்த விஷால் ஸ்ரீமலின் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையும் விரைவில் வழங்கப்படும்.
இதுதவிர தன்னார்வலர்கள் உதவியுடன் அவரது குடும்பத்துக்கு ரூ.65 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் விஷால் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது" என்றனர்.