உதகை: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல்நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை மழை தொடங்கியது. வழக்கத்தைவிட கோடை மழை அதிக அளவில் கொட்டித்தீர்த்தது. இதனால் சராசரி அளவான 230 மில்லி மீட்டரை விட அதிகமாக பெய்துள்ளதால், நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கல்லட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் நீர்வீழ்ச்சிகளில் அதிக அளவு தண்ணீர் கொட்டு கிறது.
தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால் வன விலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மே மாதத்தில் வனப்பகுதி முழுவதும் வறட்சி நிறைந்து காய்ந்து காணப்படும். இதனால் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும். இந்த ஆண்டு கொட்டித்தீர்த்த கோடை மழையால், வனப்பகுதி பசுமைக்கு திரும்பியுள்ளதால், காட்டுத்தீ அபாயம் நீங்கிவிட்டது. இதனால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
உதகையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பார்சன்ஸ் வேலி,மார்லிமந்து உள்ளிட்ட அணைகளில் வழக்கத்தைவிட தண்ணீர் கூடுதலாக இருக்கிறது. அடுத்த 2 வாரங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் இந்தஆண்டு உதகையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.