கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தை அடுத்த குரும்பனூரில் உள்ள குடியிருப்பில் வித்தியாச மான விலங்கு ஒன்று இருப்பதாக நேற்றுமுன்தினம் இரவில் வீட்டின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, அது எறும்புத் தின்னி என்பது தெரியவந்தது. அங்கிருந்து எறும்புத் தின்னியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஜக்கநாரி வனப்பகுதியில் விடுவித்தனர்.
இதுதொடர்பாக, வனத்துறையினர் கூறும்போது, “எறும்புத் தின்னி மீட்கப்பட்ட இடம் வன எல்லையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகள், கரையான்கள் இவைதான் எறும்புத் தின்னியின் முக்கிய உணவாகும்.
எறும்புத் தின்னிகள் எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள, தன் உறுப்புகளை சுருட்டிக்கொண்டு பந்துபோல மாறிவிடும். தற்போது அருகிவரும் உயிரினங்களில் எறும்புத் தின்னியும் ஒன்று. இயற்கையைப் பாதுகாக்கும் சர்வதேச ஒன்றியத்தின் (ஐயுசிஎன்) சிவப்பு பட்டியலில் இது உள்ளது” என்றனர்.