சுற்றுச்சூழல்

கான்கிரீட் காட்டில் 01: இன்னும் மீதம் இருக்கிறது இயற்கை

ஆதி வள்ளியப்பன்

பி

ழைப்புத் தேடி சென்னை மாநகருக்கு வரும் லட்சக்கணக்கானோரில் பெரும்பாலோருக்கு ஒட்டிக்கொள்ள ஏதோ ஒரு வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால், இத்தனை பேரையும் தாங்கிக்கொள்ளும் சென்னை அப்படியே இருக்க முடிவதில்லை. குறிப்பாக, அதன் இயற்கை வளமும் உயிரினப் பன்மையும் பெருமளவு சுரண்டப்பட்டுவிட்டன. அதற்குக் காரணம் முறைப்படுத்தப்படாத வளர்ச்சிதான்.

சோழமண்டல வறண்ட முட்புதர் காடுகளுக்கு மிகச் சிறந்த மையமாக சென்னை மாநகரம் இருந்தது என்று சொன்னால் ஆச்சரியமாகவே இருக்கும். ஆனால், அது உண்மை. நாடு விடுதலை பெற்ற பிறகுகூட சென்னையின் இயற்கை பரப்பு ஓரளவுக்காவது தப்பிப் பிழைத்து இருந்தது. 70-80களில் இயற்கையை அழித்து நிலத்தை கபளீகரம் செய்யும் வெறி இங்கே தீவிரமடைந்தது. சென்னை மாநகரமும் அதீதமாகப் பெருக்க ஆரம்பித்தது. இன்றைக்கு வெப்பத்தை உமிழும் சிமெண்ட் கட்டிடங்களின் குவியலாகக் கிடக்கிறது சென்னை.

இந்த கட்டிட குவியலுக்கு இடையே இயற்கை எங்காவது தப்பிப் பிழைத்திருக்க முடியுமா? தாவரங்களும், பூச்சிகளும், பறவைகளும், உயிரினங்களும் இயல்பாக இந்த மண்ணில் வேர்விடவோ, உயிர்த்திருக்கவோ தனித்திறமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இயற்கை தனக்குக் கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பையும் வீணாக்குவதில்லை. எப்போதுமே ஓரிடத்தை அழகாகவும் உயிர்ப்புள்ளதாகவும் மாற்றிவிடும் இயற்கை கிடைக்கும் இண்டு இடுக்குகளில் தலைகாட்டவே முயற்சிக்கிறது.

சென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் வாழும் என் வீட்டைச் சுற்றிலும் இப்படித் தப்பிப் பிழைத்துள்ள தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை அனுதினமும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர் ஆச்சரியப்படுத்தும். சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ, பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றை தந்து செல்லும். அப்படிப்பட்ட ஒரு படமே இங்கே இடம்பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் இருப்பது குதிக்கும் சிலந்தி. நாம் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய சிலந்திதான். இந்தச் சிலந்தி வலை பின்னுவதில்லை. குதித்து குதித்து செல்லும் பண்பு கொண்டது, இதன் காரணமாகவே அது குதிக்கும் சிலந்தி என்று அழைக்கப்படுகிறது. சிறு பூச்சிகளை உண்டு வாழ்கிறது. இது பூச்சிகளை வேட்டையாடுவதாகப் பதிவு இருக்கிறது. இந்தப் படத்தில் உண்பதற்காக வீட்டுஈ ஒன்றை குதிக்கும் சிலந்தி எடுத்துச் செல்கிறது. இதுபோன்ற அரிய காட்சிகளைப் பதிவுசெய்ய விலை உயர்ந்த ஒளிப்படக் கருவிகள் தேவையென்பதில்லை. நம் கையில் உள்ள நவீன கைபேசியே போதும். அதைப் பார்க்கும்போது பொறுமையும் நிதானமாகப் பதிவு செய்வதற்கான முயற்சியும் அவசியம்.

நம்மில் பெரும்பாலோருக்கு சிலந்திகளைப் பிடிப்பதில்லை. சட்டென்று நசுக்கிக் கொன்றுவிடுகிறோம். ஆனால், நோய்களை பரப்புவதாக நம்பப்படும் ஈ போன்ற பூச்சிகளை அது உணவாகக் கொள்வதை இந்தப் படத்திலிருந்து அறியலாம். சமீபத்திய ஆண்டுகளில் நான் கற்ற முக்கிய இயற்கை பாடம் இது.

SCROLL FOR NEXT