செண்டு வாத்துகள். 
சுற்றுச்சூழல்

நீர் நிலைகள் அழிவால் வாழ்விட பறவைகள் வாழ்வாதாரத்துக்கு சிக்கல்: பறவைகள் ஆர்வலர் கவலை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: நீர்நிலைகளை அழிப்பதால் வாத்து இனங்கள் உள்ளிட்ட வாழ்விடப் பறவைகளுக்கு வாழ்வாதாரம் என்பது சிக்கலாக மாறி உள்ளது. வாழ்விடப் பறவைகளில் காக்கை, குருவி, மைனா போன்ற பறவைகளை அனைவருக்கும் தெரியும். ஆனால், வாத்தினங்களைப் பொருத்தவரை மக்கள் வீடுகளில் வளர்க்கிற வாத்துகளை மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு வாத்து பறக்குமா?, பறக்காதா? என்பதுகூட தெரியாது.

காட்டு வாத்தினங்களில் ஒரு சில இனங்கள் தமிழகத்தையே வாழ்விடமாகக் கொண்டுள்ளன. குளிர்காலம் முடிந்து தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வலசை வந்த பறவைகள் தமிழகத்தைவிட்டு தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றுவிட்டன. வாழ்விடப் பறவைகள் மட்டுமே தமிழக நீர் நிலைகளில் எஞ்சி உள்ளன. அவற்றில் நீர்ப் பறவை இனங்களில் செண்டு வாத்து, புள்ளி மூக்கு வாத்து, குளிகை சிறகை வாத்து போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த வாத்து இனங்கள் பறக்கக் கூடியவை. இந்த மூன்று பறவைகள், நீர்நிலைகளை ஓட்டிய புதர் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன. நீர் நிலைகள் புனரமைப்பு என்ற பெயரில் கருவேல மரங்களோடு பல தாவரங்கள், புற்களையும் சேர்த்து அகற்றுவது வாத்து போன்ற வாழ்விடப் பறவைகளுக்கு வசிப்பிடம் என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. நீர்நிலைப் பறவைகள் நீருக்கு மட்டு மில்லாது மண்ணுக்கும் வளம் சேர்க்கின்றன.

ரவீந்திரன் நடராஜன்.

இது குறித்து மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறிய தாவது: வாத்தினங்கள் போன்ற நீர்ப் பறவைகள், மீனையும், தவளையையும் பிடித்துச் சாப்பிடுகின்றன என பலர் நினைக்கிறார்கள். ஆனால், நாணல், தாமரை, அல்லி போன்ற நீர்த் தாவரங்கள், இயல் தாவர உணவான கிழங்கு வகைகளை வாத்துகள் உண்டு வாழ்கின்றன. வாத்தினங்களைப் போல நீர்த் தாவரங்களை அண்டி வாழக்கூடிய பறவைகள் நிறைய உள்ளன.

மேலும், மண்ணில் அழுகிப் போகக் கூடிய கழிவுகளையும் நீர்ப் பறவைகள் சாப்பிடுகின்றன. இப்படி நீர்நிலைகள் பராமரிப்பை இயல்பாக வாத்தினங்கள் செய்து வருகின்றன. வனச்சட்டங்கள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளதால் வாத்தினங்கள் வேட்டை குறைந்துள்ளது. புள்ளி மூக்கு வாத்து என்பது நல்ல அழகான வண்ணத்தைக் கொண்டுள்ளவை. மூக்கில் உள்ள நீலம், ஆரஞ்சு, இறக்கைகளில் உள்ள ஒளிரும் பச்சை அந்தப் பறவைக்கு அழகு சேர்க்கக் கூடியவைகளாக உள்ளன.

வாத்தினங்கள் மிக அதி புத்திசாலியாக உள்ளவை என பல நேரங்களில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. வாத்தினங்கள் தங்களுக்கு எத்தனை குஞ்சுகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கையை அறிந்து வைத்துக்கொள்ளக் கூடியவை. நீர்பிடிப்புப் பகுதிகள் அதனுடைய இயற்கைத் தன்மையோடும், பல்லுயிர்ச் சூழலோடும் இருந்தால் மட்டுமே நீரினையும், அதனில் வாழும் வாழ்விடப் பறவைகளையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT