சுற்றுச்சூழல்

குளக்கரையில் சடலங்களை புதைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே குருவாட்டுச்சேரி கிராம குளக்கரையில் உயிரிழந்தவர்கள் சடலங்களை புதைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என ‘இந்து தமிழ் திசை - உங்கள் குரல்’ தொலைபேசி எண் வாயிலாக, கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.

அதில் கோபால கிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது குருவாட்டுச்சேரி கிராமம். இக்கிராமத்தில், ஏனாதி மேல்பாக்கம் சாலையை ஒட்டி சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் தட்டான்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளம், குருவாட்டுச்சேரி கிராமத்தின் நிலத்தடி நீரை உயர்த்துவதோடு, குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

ஒரு பிரிவினருக்கு மறுப்பு: இந்நிலையில், தட்டான்குளம் அருகே உள்ள மயானத்தை ஒரு பிரிவினர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மற்ற பிரிவினர்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதால், மற்ற பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டால், உயிரிழந்தோரின் உடல்கள் தட்டான்குளக்கரை மற்றும் ஏனாதி மேல்பாக்கம் சாலையோரத்தில் புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன.

குளத்து நீர் மாசு: இதனால், மழைக் காலங்களில், மழைநீரில் உடல்கள் குளத்துக்குள் அடித்துச் செல்லும் அபாயம் உள்ளது. உடல்களை எரித்த சாம்பலும் குளத்துக்குள் செல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, தட்டான் குளக்கரையில், உயிரிழந்தவர்களின் உடலைகளை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

இது குறித்து, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “குருவாட்டுச்சேரி தட்டான் குளக்கரையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படுவது, எரிக்கப்படுவது தொடர்பான புகார் குறித்து, சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT