காவேரிப்பட்டணம் அருகே கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ் சாலையில் நேற்று சுற்றிய இரு யானைகள். 
சுற்றுச்சூழல்

காவேரிப்பட்டணம் அருகே சாலையில் சுற்றிய யானைகளால் போக்குவரத்து நிறுத்தம்: இரு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே சாலையில் சுற்றிய இரு யானைகளால், வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் சுற்றுவதால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி வனப் பகுதியிலிருந்து 2 யானைகள் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஜெகதாப் ஏரியில் முகாமிட்டன.நேற்று காலை அவை கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக பையூர் சப்பாணிப்பட்டி ஏரிக்கு வந்தன.

தகவல் அறிந்து அங்கு வந்த வனச்சரகர்கள் நடராஜன் (பாலக்கோடு) , பார்த்தசாரதி (ராயக்கோட்டை) , ரவி (கிருஷ்ணகிரி) ஆகியோர் தலைமையில் வனவர் சரவணன், முருகானந்தம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வனத் துறை ஊழியர்கள் யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏரியிலிருந்து வெளியேறிய யானைகள் கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுச் சுற்றின. மேலும், சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்பு கம்பியைச் சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. யானைகள் சாலைகளில் சுற்றியதால், அவ்வழியாக எதிரும், புதிருமாகச் செல்லும் வாகனங்களை வனத்துறையினர் நிறுத்தினர்.

பின்னர் யானைகள் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் எல்லைக்கு உட்பட்ட சஞ்சீவி ராயன் மலைப் பகுதிக்குச் சென்றன. இதையடுத்து, இச் சாலையில் வாகனங்கள் மீண்டும் இயக்கப்பட்டன. தொடர்ந்து, யானைகளை தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அல்லது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊடே துர்க்கம் காப்புக் காட்டுக்கு இடம் பெயரச் செய்யும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பாலக்கோடு, காவேரிப்பட்டணம், காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் மலைப் பகுதிக்கும், வனப்பகுதிக்கும் செல்ல வேண்டாம் எனவும், யானைகள் நடமாட்டம் இருந்தால், வனத்துறைக்குத் தகவல் அளிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த இரு யானைகளும் கடந்த மார்ச் 14-ம் தேதி, இதே வழித்தடத்தின் வழியாக வந்தபோது, பாரூர் பகுதியில் இளைஞர் ஒருவரைத் தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT