தருமபுரி: பாலக்கோடு வனச்சரகத்தில் கருவுற்றிருந்த பெண் யானை உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட கேசர்குளி காப்புக்காடு குழிப்பட்டி வனப் பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததை கடந்த 18-ம் தேதி வனத்துறை பணியாளர்கள் கண்டறிந்தனர். உடனே, பிக்கிலி பகுதி அரசு கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் மூலம் அந்த யானைக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
தொடர்ந்து, 19-ம் தேதி வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அன்று மாலை யானை உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனை செய்தபோது வயிற்றில் 12 மாதம் வளர்ச்சி அடைந்த (யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்) ஆண் குட்டி இருந்தது தெரிய வந்தது.
யானையின் வயிற்றில் இரைப்பை அழற்சி, பெருங்குடல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு யானைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்ததும், வயிற்று பகுதியில் அதிக புழுக்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இப்பணியின்போது, பாலக்கோடு வனச் சரகர் நடராஜன் தலைமையிலான வனத்துறை குழுவினரும் உடனிருந்தனர்.