தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் குப்பை கொட்டுதல் உள்ளிட்ட செயல்களை தவிர்க்கும்படி வனத்துறை சார்பில் புதிதாக எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை தருமபுரி வனச் சரகத்துக்கு உட்பட்ட தொப்பூர் காப்புக்காடு வழியாக அமைந்துள்ளது. இந்த சாலையில், பாளையம்புதூர் பகுதி முதல் இரட்டைப் பாலம் வரையிலான பகுதி தொப்பூர் கணவாய் பகுதி என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் சாலையையொட்டி குப்பை கொட்டுவது உள்ளிட்ட செயல்களை தவிர்க்கும்படி ஏற்கெனவே சில இடங்களில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பையை வீசிச் செல்லுதல், இறைச்சிக் கடை கழிவுகள், பழம் மற்றும் காய்கறிக் கடை கழிவுகள், பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகியவற்றை பலரும் தொடர்ந்து கொட்டிச் செல்கின்றனர். இதை தடுக்கும் நடவடிக்கைகளில் வனத்துறை தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த வாரத்தில் தொப்பூர் கணவாய் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத்துறை குழுவினர் சாலையோரம் குப்பை, கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், குப்பை, கழிவுகளும் அகற்றப்பட்டன.
மேலும், தருமபுரி - சேலம் மார்க்க சாலையோரங்களில் 3 இடங்களிலும், சேலம்-தருமபுரி மார்க்க சாலையோரங்களில் 3 இடங்களிலும் என 6 இடங்களில் புதிதாக நேற்று முன் தினம் எச்சரிக்கை பலகைகளை வனத்துறையினர் நிறுவியுள்ளனர். ‘தொப்பூர் கணவாய் பகுதியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தவும்,
தீ மூட்டவும், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கவும், புகை பிடிக்கவும், மது அருந்தவும், குப்பை மற்றும் கழிவுகளை கொட்டவும், வன உயிரினங்களுக்கு உணவு வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோர் மீது தமிழ்நாடு வனச் சட்டம், வன உயிரின பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்ற எச்சரிக்கை இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி வனச்சரகர் அருண் பிரசாத்திடம் கேட்டபோது, ‘தொப்பூர் கணவாய் பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது. ரூ.72 ஆயிரம் மதிப்பீட்டில் 6 இடங்களில் எச்சரிக்கை பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. கூடுதலாக சில இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், கணவாய் பகுதியில் தேவையுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவவும், சாலையோரம் வனத்தையொட்டி கம்பி வேலி அமைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்’ என்றார். கணவாய் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவவும், கம்பி வேலி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.