சுற்றுச்சூழல்

வன உயிரினங்களை பாதுகாக்க நவீன மின்கேபிள்‌ திட்டம்: முதுமலையில்‌ வனத்துறை புது முயற்சி

ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை: வன உயிரினங்களை பாதுகாக்க நவீன மின் கேபிள் திட்டத்தை முதுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் செயல்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்துக்கு உட்பட்ட சேரம்பாடி வனச்சரக பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மின்சாரம் பாய்ந்து ஓர் ஆண் யானை, நான்கு காட்டுப்பன்றிகள், இரண்டு கீரிகள், 3 நாகப் பாம்புகள், காக்கை ஆகியவை கருகிய நிலையில் இறந்து கிடந்தன.

இது தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, நீதிபதி ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் வழங்கிய உத்தரவில், ‘வனப் பகுதிகளில் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழும் போதும், மின் கம்பிகள் இருக்கும் பகுதிகளை வன விலங்குகள் கடக்கும் போதும், தானாகவே மின்சாரம் தடைபடும் வகையில், சென்சார் உட்பட பாதுகாப்புச் சாதனங்களை பொருத்த வேண்டும்.

தரைக்கு அடியில் மின் கம்பிகளைக் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும். மின் வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி வனப்பகுதிகளுக்குள் சென்று ஆய்வு நடத்த வேண்டும். வன விலங்குகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், வனப்பகுதியில்‌ இருக்கும்‌ உயர் அழுத்த கம்பிகளை மாற்றி, பாதுகாப்பான ஒரே கேபிள்‌ வழியாக மின்சாரத்தை எடுத்துச்‌ செல்ல முடிவு செய்யப்பட்டு, இதற்கான ஆய்வுப் பணிகளை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்‌.

இது குறித்து கார்குடி வனச்சரகர் விஜய்‌ கூறியதாவது: ‘ஏரியல்‌ பஞ்சுடு கேபிள்‌’ என்றமுறையில்‌ அனைத்து மின்‌ கம்பிகளையும்‌ ஒரே கேபிளில்‌ இணைத்து, பாதுகாப்பாக சுற்றப்பட்டு மின்கம்பங்கள்‌ வழியாக எடுத்துச்‌ செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால்‌, மழை மற்றும்‌ புயல்‌ காலங்களில்‌ இந்த கேபிள்‌ வயர்‌ அறுந்து விழுந்தாலும்‌, வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும்‌ ஏற்படாது.

முதுமலையில்‌ முதன்முறையாக தொரப்பள்ளி பகுதியில்‌ இருந்து தெப்பக்காடு வனப்பகுதி வரை இந்தஒற்றை கேபிள்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. இதைத்‌தொடர்ந்து, பிற இடங்களுக்கும்‌ இத்திட்டம்‌ விரிவு படுத்தப்படும்‌, என்றார்.

SCROLL FOR NEXT