ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி, ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறும், ‘கருப்பன்’ எனப் பெயரிடப்பட்ட ஒற்றை யானை, கடந்த ஓராண்டாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியது. யானை தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்தனர்.
யானையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். மூன்று முறை கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, ‘கருப்பன்’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், மகாராஜன்புரம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் நேற்று முன் தினம் புகுந்த ‘கருப்பன்’ யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.
தொடர்ந்து மாரியப்பன், சின்னத்தம்பி ஆகிய கும்கி யானைகள் உதவியோடு ‘கருப்பன்’ யானை லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பர்கூர் தட்டக்கரை வனப் பகுதியில் அன்று மாலை யானை இறக்கி விடப்பட்டது. சிறிது நேரம் மயக்கத்திலேயே இருந்த யானை, பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.
அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் தட்டக்கரை வனப்பகுதியில் 10 இடங்களில் கேமராக்களைப் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். அங்கு ‘கருப்பன்’ யானைக்குத் தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கும் என்பதால், அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மயக்க ஊசி செலுத்தியதால் யானையின் உடல்நலம் பாதிக்கப்படுமாயின், உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தட்டக் கரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயக்க ஊசி செலுத்தியதால் யானையின் உடல்நலம் பாதிக்கப்படுமாயின், உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் தட்டக்கரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.