சுற்றுச்சூழல்

கோவை அருகே பண்ணை வீட்டில் இருந்த தொட்டியில் மூழ்கி குட்டி யானை உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கோவை: கோவை அருகே பண்ணை வீட்டுத் தொட்டியில் மூழ்கி குட்டி யானை உயிரிழந்ததை தொடர்ந்து, யானைகளின் தாகம் தீர்க்க வனப்பகுதியில் புதிய தொட்டிகள் கட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். குட்டியானையை தேடி நேற்று மீண்டும் அதே இடத்துக்கு யானைகள் வந்துசென்றன.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கிராமத்தில் திரைப்பட நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து 180 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்தில் பண்ணை வீட்டின் அருகே கீழ் நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. வனத்தை விட்டு வெளியேறி வரும் காட்டு யானைகள் தொட்டியில் தண்ணீர் குடித்துச் செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் தண்ணீர் குடிக்க வந்தபோது, தவறி விழுந்து குட்டி யானை ஒன்று உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி தொட்டியின் மேல் பகுதியை உடைத்து யானையின் உடலை வெளியே எடுத்தனர். பின்னர், வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை.

இதற்கிடையே, நேற்று அதிகாலை நேரத்தில் 6 யானைகள் வனத்தை வீட்டு வெளியேறி, பண்ணை வீட்டுக்கு வந்தன. உயிரிழந்த குட்டி யானையை தேடி அந்த காட்டு யானைகள் வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சில மணி நேரம் பிளிறியபடி நின்ற யானைகள், பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டன.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, “உயிரிழந்த பெண் யானைக்குட்டியின் வயது ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் இருக்கும். இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம். கீழ்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல்பகுதி 2-க்கு 2 அடி அளவில் மட்டும் திறந்திருந்ததால் தொட்டிக்குள் காற்றோட்டம் அதிகம் இல்லை. யானையின் உடலின் உட்பகுதிகள் சிதைந்த நிலையில் இருந்தன. நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு குட்டி யானை உயிரிழந்துள்ளது.

இனிமேல் அந்த தொட்டியை பயன்படுத்தக்கூடாது என உரிமையாளரிடம் தெரிவித்துள்ளோம். தொட்டி நிரந்தரமாக மண்கொட்டி மூடப்படும். பண்ணை தோட்டத்தில் முன்பக்கம் மட்டும் சுவர் உள்ளது. பின்பக்கம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. அங்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், யானைகள் இங்கு அடிக்கடி வந்து, தண்ணீர் அருந்திச் சென்றுள்ளன. யானைகள் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்க வன எல்லைக்கு உள்ளேயே புதிதாக தண்ணீர் தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT