கோவை: கோவை ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதேகவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை காட்டுத்தீ ஏற்பட்டது.
தகவல் அறிந்த மதுக்கரை வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் நேற்றுவரை முழுமையாக தீ அணையவில்லை.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “தீயை அணைக்கும் பணியில் 40-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ பரவிய பகுதியில் மரங்கள், செடிகள் அதிகம் இல்லை. அணுக முடியாத இடத்தில் உள்ள வழுக்குப் பாறைகளில் உள்ள புற்கள், புதர்களில் தீ பரவி வருகிறது. கீழே அடர்ந்த வனப்பகுதிக்கு தீ பரவாமல் இருக்க தீ தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்” என்றனர்.