கான்சாபுரம் பகுதியில் வறண்டு கிடக்கும் வயல் வெளிகள். 
சுற்றுச்சூழல்

கோடை தொடங்கியதால் வறண்டது பிளவக்கல் அணை: நெற்பயிர்களை காக்க முடியாமல் விவசாயிகள் வேதனை

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: பிளவக்கல் பெரியாறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாத நிலையில், நெல் வயல்கள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பிளவக்கல் பெரியாறு அணை அமைந்துள்ளது. 48.5 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் மூலம் 40 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் 960 ஏக்கர் விளை நிலங்கள் உட்பட 8,531 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வடகிழக்குப் பருவமழை காரணமாக அக்டோபர் மாத தொடக்கத்திலேயே பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 40 அடியைத் தாண்டியது. இந்நிலையில், நவம்பர் 5-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடி நடைபெற்றது. டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தது. அதன்பின், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெரிய அளவு மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல்
அணை நீர்மட்டம் குறைந்து குளம் போல் காட்சி அளிக்கிறது

தற்போது வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில், பெரியாறு அணையின் நீர்மட்டம் 24 அடிக்கு கீழ் குறைந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அணை நீர்வரத்தை ஆதாரமாக கொண்ட 20-க்கும் மேற்பட்ட கண் மாய்கள் வறண்டு கிடக்கின்றன.

வத்திராயிருப்பு பெரிய குளம் கண்மாய், விராகசமுத்திரம் கண்மாய், வீவனேரி கண்மாய், கொணந்தருவி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் நீர்வரத்து இல்லாமல் நெல் வயல்கள் வறண்டு உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மலை அடிவாரத்தில் உள்ள கொடிக்குளம், கான்சாபுரம், வத்திராயிருப்பு பகுதிகளில் நெல் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கோடை மழை பெய்தால் மட்டுமே நடவு செய்த வயல்களில் முழுமை யாக அறுவடை செய்ய முடியும் என்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT