மேட்டூர்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியில் கடமான்கள் உலா வருகின்றன. மேட்டூர் அருகே, தமிழக - கர்நாடக எல்லையை ஒட்டி பாலாறு பகுதி உள்ளது. இங்குள்ள கர்நாடக எல்லையின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி அருகே வனத்துறைக்குச் சொந்தமான அலுவலகம் அமைந்துள்ளது.
இப்பகுதியைச் சுற்றியும் வனப்பகுதி என்பதால் யானை, மான், முயல், நரி போன்ற விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். தற்போது, கோடை காலம் என்பதால் தண்ணீர் அருந்த வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியே வருவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மாலை நேரத்தில் பாலாற்றில் தண்ணீர் அருந்த யானைகள், மான்கள் போன்ற விலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. இச்சாலையை கடந்து செல்லும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி விலங்குகளை ரசித்துச் செல்வர்.
இது மட்டுமின்றி கர்நாடகா வனத்துறை அலுவலகம் மற்றும் சோதனைச் சாவடி ஆகிய பகுதிகளில் கடமான் அடிக்கடி வந்து செல்கிறது. சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களுக்கும் கடமானின் அழகை ரசித்துச் செல்கின்றனர்.