தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகம் கோடுபட்டி அருகே சின்னாற்றில் சேற்றில் சிக்கி உயிரிழந்த பெண் யானை. 
சுற்றுச்சூழல்

சேற்றில் சிக்கியும், விஷக் காய்களை தின்றும் தருமபுரியில் 2 யானைகள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சேற்றில் சிக்கியும், விஷக் காய்களை தின்றும் 2 யானைகள் உயிரிழந்தன. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரக பகுதியில் கோடுபட்டி அருகே சின்னாற்றுப் படுகையில் சேற்றில் சிக்கி பெண் யானை ஒன்று உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இந்த யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஒகேனக்கல் வனச்சரகம் போடூர் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த தகவலும் தெரிய வந்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் முதலில் சேற்றில் சிக்கி உயிரிழந்த யானையின் உடலை பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

அதன்பின்னர், ஆண் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். இதற்காக, வாகனங்கள் செல்ல முடியாத அடர்வனப் பகுதியில் வனத்துறையினரும், கால்நடை மருத்துவர் குழுவினரும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பிரேதப் பரிசோதனை செய்தனர்.

பிரேதப் பரிசோதனையின்படி கோடுபட்டியில் சுமார் 15 வயதுடைய பெண் யானை சேற்றில் சிக்கி உயிரிழந்திருப்பதும், போடூர் வனப்பகுதியில் சுமார் 8 வயதுடைய ஆண் யானை விஷக் காய்களை தின்று உயிரிழந்திருக்கலாம் என்றும் முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே காரணங்கள் முழுமையாக தெரிய வரும், என வனத்துறையினர் கூறினர்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில், மாரண்டஅள்ளி அருகே மின் வேலியில் சிக்கி 3 யானைகளும், கம்பைநல்லூர் அருகே மின்பாதையில் உரசி ஒரு யானையும் உயிரிழந்தன. இந்நிலையில், தற்போது பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகங்களில் 2 யானைகள் உயிரிழந்துள்ளன. அடுத்தடுத்து 6 யானைகள் உயிரிழந்திருப்பது சூழல் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானைகளின் உயிரிழப்பை தடுக்க, வனத்துறை சார்பில் காலத்துக்கேற்ற ஆய்வுகளை விரிவுபடுத்துவதுடன், நிபுணர்களுடன் விவாதித்து சிறந்த ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும், என்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT