ஓசூர்: மின் வேலியில் சிக்கி தாய் உயிரிழந்த நிலையில், தாயை இழந்த இரு குட்டி யானைகள் வனப்பகுதியில் நலமுடன் சுற்றி வருவதைக் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட வனத்துறையினர் உறுதி செய்தனர்.
தருமபுரி மாவட்டம் மாரண் டஅள்ளி அருகே காளி கவுண்டன் கொட்டாய் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்வேலியில் சிக்கி 2 பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை உயிரிழந்தன. அதனுடன் இருந்த 2 குட்டி யானைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின.
தாயை இழந்த இரு குட்டி யானைகளும் காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் சில நாட்கள் சுற்றிய நிலையில், குட்டி யானைகளை பாலக்கோடு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென வனத்துறையினரின் கண்காணிப்பு வளையத்திலிருந்து குட்டி யானைகள் தப்பின. இந்நிலையில், குட்டி யானைகளைப் பாதுகாக்கக் கோரி வன ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து, ‘தாயை இழந்த குட்டி யானைகள் மற்ற யானைகளுடன் உள்ளதா இல்லை தனியாக இருக்கிறதா என்பதை வனத்துறையினர் கண்காணித்துப் பாதுகாக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாரண்டஅள்ளி-பெட்டமுகிலாளம் இடையில் உள்ள வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகக் குட்டி யானைகளைத் தேடும் பணியில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனத்துறையினர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் குட்டி யானைகள் பெட்டமுகிலாளம், வடக்கு வனப்பகுதியில் உள்ள மணல் பள்ளம் என்ற இடத்தில் நலமுடன் சுற்றி வருவதை வனத்துறையினர் உறுதி செய்ததோடு, தொடர்ந்து அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தேன்கனிக் கோட்டை வனச்சரகர் முருகேசன் கூறியதாவது: பாலக்கோடு வனத் துறையினருடன் இணைந்து தாயை இழந்த குட்டி யானைகளைத் தீவிரமாகத் தேடிய நிலையில், அவை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாரண்டஅள்ளி-பெட்டமுகிலாளம் இடையில் உள்ள வனப்பகுதியில் நலமுடன் சுற்றி வருவதைப் பார்த்தோம்.
மேலும், குட்டி யானைகள் பிற யானைகளின் கூட்டத்தையொட்டியப் பகுதியில் செல்வதால், குட்டி யானைகளை மற்ற யானைகள் விரைவில் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது, குட்டி யானைகள் மீண்டும் மாரண்டஅள்ளி வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளன. தொடர்ந்து, அதன் நடமாட்டத்தை இரு மாவட்ட வனத்துறையினரும் கண்காணித்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.