கோவை ஆர்எஸ்புரம் வனக்கல்லூரியில் நடைபெற்ற ‘உலக காடுகள் நாள் சிறப்பு சூழல் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பேசிய மாநில வனப் பணிகளுக்கான மத்திய உயர் பயிற்சியகத்தின் முதல்வர் திருநாவுக்கரசு. படம்: ஜெ.மனோகரன் 
சுற்றுச்சூழல்

வனத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: கோவையில் சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோவை: வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுவரும் வனத் துறையினருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாநில வனப் பணிகளுக்கான மத்திய உயர் பயிற்சியகத்தின் முதல்வர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

மாநில வனப் பணிகளுக்கான மத்திய உயர் பயிற்சியகம், தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் மற்றும் ‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், உலக காடுகள் நாள் சிறப்பு சூழல் சந்திப்பு நிகழ்ச்சி ஆர்எஸ்புரம் வனக்கல்லூரியில் நேற்று நடந்தது. மாநில வனப் பணிகளுக்கான மத்திய உயர் பயிற்சியகத்தின் முதல்வர் திருநாவுக்கரசு தலைமை வகித்து பேசியதாவது:

வனத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட துறை, இன்று பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதும் வனத் துறை குறித்து பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. நாட்டில் அதிக நிலப்பரப்பை நிர்வகிக்கும் பெருமையை வனத்துறை கொண்டுள்ளது.

உதாரணமாக, ஒரு வனக் காப்பாளர், ஒரு வனக் காவலர் என மொத்தம் இரண்டு பேர் மட்டுமே ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வனப்பகுதி மற்றும் வன விலங்குகளை பாதுகாப்பதில் வனத்துறைக்கு தேவையான உதவிகளை அனைவரும் செய்ய வேண்டும்’’ என்றார்.

மாநில வனப் பணிகளுக்கான மத்திய உயர் பயிற்சியகத்தின் பயிற்சி ஆசிரியர் அனிஷா கல்கூர், தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பேசினர்.

ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. யானைகள் முகாம் குறித்து கால்நடை மருத்துவ நிபுணர்கள் சுகுமார், கலைவாணன், பிரகாஷ் உள்ளிட்டோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். ‘ஓசை’ அமைப்பின் நிர்வாகிகள் காளிதாஸ், அவைநாயகன், செந்தில்குமார் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT