ஆட்சியர் கிராந்தி குமார் பாடி | கோப்புப் படம் 
சுற்றுச்சூழல்

யானைகள் உயிரிழப்பை தடுக்க கோவையில் ஆலோசனை

செய்திப்பிரிவு

கோவை: மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பதை தடுக்க, புதிய வழிமுறைகளை பின்பற்ற கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளை வரையறுத்து, அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்தல், உயரமான மின்கம்பங்களை அமைப்பது. காப்பிடப் பட்ட மின் கம்பிகளை பயன்படுத்துதல், மின் கம்பங்களை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

வனத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகள் மற்றும் மின்கம்பிகளை ஆய்வு செய்ய கூட்டு புலத் தணிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும், மனித -வன விலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பது குறித்து வட்டாட்சியர், வனச்சரக அலுவலர், காவல் ஆய்வாளர், மின்வாரிய அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT