திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவருக்கு, அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி காலை முருகேசன் தனது விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது, விளை நிலத்தின் மையப்பகுதியில் 30 அடி ஆழமும், 15 அடி அகல சுற்றளவில் நிலம் பூமிக்குள் உள்வாங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகே சென்று பார்த்தபோது அதிக சத்தத்துடன் நிலம் மேலும் உள் வாங்கியதை பார்த்ததும் அவர் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடி வந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஆலங்காயம் தீயணைப்புத்துறையினர், வாணியம்பாடி வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு நிலத்தின் மையப்பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து யாரும் அருகே செல்லாதபடி செய்தனர். வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த் துறையினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். நிலம் உள்வாங்கிய இடத்தில் தண்ணீர் வெளியேறியது.
நிலம் 30 அடி ஆழத்துக்கு உள் வாங்கியதை தொடர்ந்து அங்கு புவியியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்களும், விவ சாயிகளும் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், இந்திய புவியியல் துறை தமிழ்நாடு கிளை இயக்குநர் ஹிஜாஸ் பஷீர் தலைமையில் மூத்த புவியியலாளர்கள் அசார் அகமது, ஜெயபால் உள்ளிட்டோர் நேற்று ஆலங் காயம் அடுத்த கூவல்குட்டை கிராமத்துக்கு சென்று நிலம் உள்வாங்கிய நிலத்தை ஆய்வு செய்தனர்.அங்குள்ள மண், துகள்கள், பள்ளத்தில் இருந்து வரும் தண்ணீர், பாறை துண்டுகளை சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு எடுத்துச்சென்றனர்.
இது குறித்து புவியியல் துறையினரிடம் கேட்டபோது, ‘‘நிலம் உள் வாங்கியதை தொடர்ந்து கூவல்குட்டை கிராமத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மண், தண்ணீர், பாறை துகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி, அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை கொண்டுதான் பூமி உள்வாங்கியதன் காரணம் தெரியவரும். அதன்பிறகு முழு விவரம் கூற முடியும்’’ என்றனர்.