சுற்றுச்சூழல்

ராமேசுவரம் | அக்னி தீர்த்தக் கடலில் ஆறாக பாயும் கழிவுநீர்: நோய் தொற்று அபாயத்தில் பக்தர்கள்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல் அருகே கழிவுநீர் ஆறாக பாய்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், புனித நீராடும் பக்தர்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது. இக் கோயிலுக்குள்ளே மகாலட்சுமி தீர்த்தம், கெந்தமாதன தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், கங்கா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், யமுனா தீர்த்தம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், சக்கர தீர்த்தம், சர்வ தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், சிவ தீர்த்தம், நள தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், நீல தீர்த்தம், சூரிய தீர்த்தம், கவய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கோடி தீர்த்தம் என 22 புண்ணிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க தரிசனம், அக்னி தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடி மறைந்த முன்னோர்களுக்கு பித்ரு காரியம் செய்வது பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடி பக்தர்கள் ராமேசு வரம் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதசுவாமி கோயிலைச்சுற்றியுள்ள தங் கும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அக்னி தீர்த்தக்கடல் அருகே கலக்கிறது. மேலும் பல்வேறு கழிவுகளும், குப்பையும் கடற்கரை ஓரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அக்னிதீர்த்தக் கடலில் நீராடும் பக்தர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே கலக்கும் கழிவு நீர் ஓடைகளில் ஒன்று.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றக் கிளை ``நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா?'' எனக் கேள்வி எழுப்பியதுடன், அக்னி தீர்த்தக் கடல் பகுதியை சுகாதாரமாக பராமரிக்கவும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, அக்னி தீர்த்த கடற்கரை பகுதியை பராமரிக்கத் தொடங்கிய நகராட்சி நிர்வாகம் பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டது.

இதுகுறித்து ராமேசுவரம் நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அக்னி தீர்த்தக் கடற்பகுதியை சுற்றி கழிவுநீரை விடும் தனியார் விடுதிகளின் குழாய்கள் ‘சீல்’ வைக்கப்படும். விடுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை செப்டிக் டாங்க்கில் சேகரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிப்பதோடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT